ராஜஸ்தான், சட்டீஸ்கர், மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் இந்த ஆண்டு இறுதியில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்தத் தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான முன்னோட்டமாகப் பார்க்கப்படுகிறது. அதனால், இந்த 5 மாநிலங்களில் நடைபெறும் சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெறுவதற்காக காங்கிரஸ், பா.ஜ.க உள்ளிட்ட அரசியல் கட்சிகள் மும்முரமாகச் செயல்பட்டு வருகிறது. அந்த வகையில் மத்தியப் பிரதேச மாநிலத்தில் பல வாக்குறுதிகளை ஆம் ஆத்மி கட்சியினரும், காங்கிரஸ் கட்சியினரும் கொடுத்து வருகின்றனர்.
இதில், சட்டமன்றத் தேர்தல் அறிவிக்கும் முன்பாகவே சத்தீஸ்கர் மற்றும் மத்தியப் பிரதேச மாநிலங்களில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை பா.ஜ.க சில தினங்களுக்கு முன்பு வெளியிட்டது. அதன்படி, மத்தியப் பிரதேசத்தில் 230 சட்டமன்றத் தொகுதிகளில் முதற்கட்டமாக 37 வேட்பாளர்கள் கொண்ட பட்டியலை கடந்த ஆகஸ்ட் மாதம் 17ஆம் தேதி வெளியிட்டது.
அதே போல், 39 வேட்பாளர்கள் அடங்கிய இரண்டாவது வேட்பாளர் பட்டியலையும், 1 பேர் அடங்கிய மூன்றாவது வேட்பாளர் பட்டியலையும் பா.ஜ.க கடந்த செப்டம்பர் மாதம் 26ஆம் தேதி வெளியிட்டது. அந்த வேட்பாளர் பட்டியலில், மத்திய அமைச்சர் நரேந்திர தோமர், பிரஹலாத் படேல், பக்கன் குலாஸ்தே மற்றும் பா.ஜ.க தேசிய செயலாளர் கைலாஷ் விஜயவர்கியா ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். ஆனால், இந்த பட்டியல்களில் தற்போதைய முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் மட்டும் இதுவரை இடம்பெறாதது மத்திய பிரதேச அரசியலில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியிருந்தது. மேலும், அவருக்கு இந்த முறை பா.ஜ.க தலைமை வாய்ப்பு வழங்காது எனவும் பரவலாக பேசப்பட்டு வந்தன.
இந்த நிலையில், மத்திய பிரதேச முதல்வர் சிவ்ராஜ்சிங் சவுகான் செஹோர் மாவட்டத்தில் உள்ள புத்னியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். அதில் பேசிய அவர், “என்னை பொறுத்தவரை அரசியல் என்பது பொதுமக்களுக்கு சேவை செய்வது தான். மக்களுக்கு சேவை செய்வது என்பது கடவுள்களை வழிபடுவது போல் ஆகும். நான் அரசை நடத்தவில்லை. ஒரு குடும்பத்தை நடத்துகிறேன். எனக்கு எந்தவித பதவிக்கும் பேராசை இல்லை. எனது சதையும், எலும்பும் மக்களுக்கு பயன்படுமானால் அதற்கு கூட மகிழ்ச்சி அடைவேன். என்னை போன்ற சகோதரனை நீங்கள் காணமாட்டீர்கள். நான் வெளியேறும் போது நீங்கள் என்னை இழக்க நேரிடும்” என்று உருக்கமாக பேசினார்.