![Eknath Shinde who resigned his cm designation](http://image.nakkheeran.in/cdn/farfuture/H_tiMvANC_suev2oNZngWUIMZs5sjAwtvhi_UZxMwHs/1732601787/sites/default/files/inline-images/resignn.jpg)
மகாராஷ்டிராவில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க தலைமையிலான மகாயுதி கூட்டணி கட்சிகள் 231 இடங்களில் வெற்றி பெற்றது. காங்கிரஸ் தலைமையிலான மகா விகாஸ் அகாடி கூட்டணி 46 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. இதில், மகாயுதி கூட்டணியில் உள்ள பா.ஜ.க 132 இடங்களிலும், ஏக்நாத் ஷிண்டேவின் சிவசேனா 57 இடங்களிலும், அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் 41 இடங்களிலும் வெற்றி பெற்றிருந்தது. அதே போல், காங்கிரஸ் தலைமையிலான மகா விகாஸ் அகாடி கூட்டணியில் உத்தவ் தாக்கரேவின் சிவசேனா 20 இடங்களிலும், காங்கிரஸ் 10 இடங்களிலும், சரத் பவாரின் சரத்சந்திர பவார் தேசியவாத காங்கிரஸ் 10 இடங்களிலும் வெற்றி பெற்றிருந்தது.
மகாராஷ்டிராவில் ஆட்சியமைக்க 145 இடங்கள் தேவை என்ற பட்சத்தில் நடைபெற்ற இந்த தேர்தலில், பெரும்பான்மைக்கு தேவையான அதிக இடங்களை கைப்பற்றியுள்ள பா.ஜ.க தலைமையிலான மகாயுதி கூட்டணி ஆட்சியைத் தக்க வைத்துள்ளது. அதே சூழ்நிலையில், அம்மாநிலத்தில் அடுத்த முதல்வர் யார் என்று கேள்வியும் எழுந்திருந்தது. கூட்டணி கட்சிகளுக்குள் ஆலோசனை நடத்தி அடுத்த முதல்வர் யார் என்ற அறிவிப்போம் என்று மகாயுதி கூட்டணி தலைவர்கள் கூறி வந்தனர்.
இதில், முதல்வராக பதவி வகித்து வந்த ஏக்நாத் ஷிண்டே, மீண்டும் முதல்வராக வேண்டும் என்று கோரிக்கை வைத்ததாகக் கூறப்படுகிறது. ஆனால், 132 இடங்களை வைத்திருக்கும் பா.ஜ.க, ஏக்நாத் ஷிண்டே ஆதரவு இல்லாமல் அஜித் பவாரின் ஆதரவை மட்டுமே ஆட்சியமைக்க முடியும் என்ற முனைப்பில் இருந்தது. இந்த சூழ்நிலையில், துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் தலைமையிலான பா.ஜ.க கூட்டணிக்கு ஆதரவு தருவதாகவும், முதல்வர் போட்டியில் தான் இல்லை எனவும் அஜித் பவார் கூறினார். இருந்த போதிலும், அடுத்த முதல்வர் யார் என்று கேள்வி கூட்டணி கட்சிகளுக்குள் குழப்பம் நிலவி வந்தது.
இந்த நிலையில், மகாயுதி கூட்டணி தலைவர்களான ஏக்நாத் ஷிண்டே, துணை முதல்வர்கள் தேவேந்திர பட்னாவிஸ், அஜித் பவார் ஆகியோர் இணைந்து இன்று (26-11-24) அம்மாநில ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணனை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரினர். மேலும், முதல்வராக இருந்த ஏக்நாத் ஷிண்டே, தனது ராஜினாமா கடிதத்தை ஆளுநரின் வழங்கினார். இதன் மூலம், தேவேந்திர பட்னாவிஸ் தான் மகாராஷ்டிராவின் அடுத்த முதல்வர் ஆவார் என்ற எதிர்பார்க்கப்படுகிறது.