மகாராஷ்டிராவில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க. தலைமையிலான மகாயுதி கூட்டணி அதிக இடங்களை பெற்று ஆட்சியை பிடித்துள்ளது. ஆனாலும், மகாராஷ்டிராவின் அடுத்த முதல்வர் யார் என்ற கேள்வியால் 10 நாட்களாக கூட்டணி கட்சிகளுக்குள் குழப்பம் வந்த நிலையில், தற்போது மகாராஷ்டிராவின் அடுத்த முதல்வராக பா.ஜ.க தலைவர் தேவேந்திர பட்னாவிஸ் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
மகாராஷ்டிர பா.ஜ.க. சட்டமன்றக் கட்சிக் கூட்டம் மும்பையில் இன்று (04.12.2024) நடைபெற்றது. மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் விஜய் ரூபானி ஆகியோர் கலந்து கொண்ட இந்த கூட்டத்தில், மகாராஷ்டிரா பா.ஜ.க சட்டமன்றக் கட்சியின் தலைவராக தேவேந்திர பட்னாவிஸ் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதே போல், சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் ஆகிய மகாயுதி கூட்டணி கட்சிகளின் ஆதரவால் தேவேந்திர பட்னாஸ் அம்மாநில முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இதன் மூலம் நாளை(05-12-24) தேவேந்திர பட்னாவிஸ் முதல்வராக பதவியேற்கவுள்ளார். இதனையடுத்து, கூட்டணி கட்சிகளான சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளுக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தொடக்கக் காலத்தில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பில் உறுப்பினராக இருந்த தேவேந்திர பட்னாவிஸ், பா.ஜ.கவில் இணைந்து தனது 27வது வயதில் நாக்பூர் மேயராக பணியாற்றினார். அதன் பிறகு, நாக்பூர் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு 1999ஆம் ஆண்டு எம்.எல்.ஏவாக பொறுப்பேற்றார். அதனை தொடர்ந்து, மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் பா.ஜ.க தேசிய செயலாளர் ஜே.பி.நட்டா ஆகியோர் முன்னிலையில், பா.ஜ.க எம்.எல்.ஏக்களின் வாக்கெடுப்பில் வெற்றி பெற்றதையடுத்து தேவேந்திர பட்னாவிஸ் சட்டமன்றக் கட்சித் தலைவராக பொறுப்பேற்றார். மகாராஷ்டிரா மாநில சட்டமன்றத்தில் மிகப்பெரிய தலைவராக இருந்த பட்னாவிஸ், தனது 44வது வயதில் 2014ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில், பிரிக்கப்படாத சிவசேனா கட்சியுடன் கூட்டணி அமைத்து முதல் முறையாக மகாராஷ்டிரா முதல்வராக தேவேந்திர பட்னாவிஸ் பதவியேற்றார். சரத் பவாருக்கு பிறகு, மகாராஷ்டிரா வரலாற்றில் இரண்டாவது இளம் வயது முதல்வர் என்ற பெருமையை பட்னாவிஸ் பிடித்தார்.
அதன் பிறகு, நடந்த 2019ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலுக்கு பிறகு, சிவசேனா கூட்டணியில் இருந்து வெளியேறியது. இதனால், தேவேந்திர பட்னாவிஸ் தலைமையிலான பா.ஜ.கவுக்கு அரசியல் நெருக்கடி ஏற்பட்டது. இதனையடுத்து, தேவேந்திர பட்னாவிஸ் அஜித் பவாருடன் கூட்டணி அமைத்து ஆட்சி அமைத்தார். அதன்படி, தேவேந்திர பட்னாவிஸ் முதல்வராகவும், அஜித் பவார் துணை முதல்வராகவும் பதவியேற்றனர்.
ஆனால், அந்த அரசு வெறும் 5 நாட்கள் மட்டுமே நீடித்தது. அஜித் பவார் மீண்டும் தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கே திரும்பியதால், உத்தவ் தாக்கரே தலைமையில் ஒரு புதிய கூட்டணி அமைந்தது. உத்தவ் தாக்கரே அணியில் இருந்து பிரிந்த ஏக்நாத் ஷிண்டே, பா.ஜ.கவில் இணைந்ததால் உத்தவ் தாக்கரேவின் ஆட்சி கவிழ்ந்து மகாயுதி கூட்டணி ஆட்சி அமைந்தது. அதன்படி, ஏக்நாத் ஷிண்டே முதல்வராகவும், தேவேந்திர பட்னாவிஸ் மற்றும் அஜித் பவார் ஆகியோர் துணை முதல்வராகவும் பொறுப்பு வகித்து வந்தனர். இந்த நிலையில், நடைபெற்ற மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தலில் மகாயுதி கூட்டணியில் அதிக இடங்களை பெற்று மீண்டும் ஆட்சியை தக்க வைத்துள்ளது. கூட்டணியில் உள்ள பா.ஜ.க அதிக இடங்களை கைப்பற்றியிருப்பதால் பா.ஜ.க தலைவர் தேவேந்திர பட்னாவிஸ் முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இதன் மூலம், மகாராஷ்டிராவின் மூன்றாவது முறையாக தேவேந்திர பட்னாவிஸ் முதல்வராக பதவியேற்கவுள்ளார்.