Skip to main content

“முதலில் நான் தாய்க்கு மகனாக இருக்க வேண்டும்” - சீமான்

Published on 08/01/2025 | Edited on 08/01/2025
Seeman condemns Governor Rn Ravi

2025 ஆம் ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டம் நேற்று முன் தினம் (06-01-25) தொடங்கியது. அப்போது, அண்ணா பல்கலைக்கழக விவகாரம் குறித்து அ.தி.மு.க எம்எல்ஏக்கள் கோஷம் எழுப்பிய நிலையில் அ.தி.மு.க எம்எல்ஏக்கள் அனைவரும் அமளியில் ஈடுபட்டதால் குண்டுக்கட்டாக வெளியேற்றப்பட்டனர். அதேபோல், சட்டப்பேரவைக்குள் வந்திருந்த தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி உரையாற்றாமல் சிறிது நேரத்திலேயே சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்து புறப்பட்டுச் சென்றார். தமிழ்த்தாய் வாழ்த்து பாடிய உடன் தேசிய கீதம் பாடப்படவில்லை என்பதால் ஆளுநர் வெளியேறினார் என்று ஆளுநர் மாளிகை விளக்கம் அளித்தது. சட்டப்பேரவையை விட்டு ஆளுநர்  வெளியேறியது குறித்து பலரும் கருத்து தெரிவித்து வந்தனர்.

அந்த வகையில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கருத்து தெரிவித்துள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் பகுதியில் நாம் தமிழர் கட்சியின் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. அதன் பிறகு, அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், “சட்டப்பேரவையில் இருந்து ஆளுநர் வெளியேறியது அநாகரிமான அணுகுமுறை. அதற்கு நீங்கள் தமிழ்நாட்டை விட்டே வெளியேறியிருக்கலாம். எவ்வளவு காலமாக இந்த பிரச்சனை இருக்கிறது. அவரவர் தாய்மொழிக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும். அதனால், மொழி வாரியாக மாநிலங்கள் பிரித்துக் கொடுக்கப்பட்டிருக்கிறது. 

தமிழ்த்தாய் வாழ்த்தை பாடிய பிறகு தான் தேசியக் கீதத்தை பாட முடியும். முதலில், நான் தாய்க்கு மகனாக இருக்க வேண்டும். அதன் பிறகு தான் அத்தைக்கு மருமகனாக இருக்க முடியும். பொங்கல் பண்டிகையையொட்டி யூ.ஜி.சி நெட் தேர்வு வைத்தால் தேசப்பற்று வருமா? அல்லது தேச வெறுப்பு வருமா? ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் நாம் தமிழர் கட்சி நிச்சயமாக போட்டியிடும்” என்று கூறினார். 

சார்ந்த செய்திகள்