தமிழகத்திற்கும் கர்நாடகாவிற்கும் இடையே காவிரி நீர் தொடர்பாகப் பல ஆண்டு காலமாகப் பிரச்சனை இருந்து வருகிறது. அதே வேளையில், காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்ட கர்நாடக அரசு முயற்சி மேற்கொண்டு வருகிறது. ஆனால், காவிரி ஆற்றின் குறுக்கே அணை கட்டினால், தமிழகத்தில் தண்ணீர் பஞ்சம் ஏற்படும் என்ற அடிப்படையில் அணை கட்டக்கூடாது என்று தமிழக அரசு திட்டவட்டமாகக் கூறி வருகிறது.
இதற்கிடையே, விரைவில் மேகதாது அணை கட்டப்படும் என்று கர்நாடகா முதல்வர் சித்தராமையா தெரிவித்திருந்தார். கர்நாடகா மாநிலத்தின் சட்டசபைக் கூட்டத்தொடர் கடந்த 12 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் முதல்வர் சித்தராமையா 2024-2025 ஆம் நிதி ஆண்டிற்கான பட்ஜெட்டை கடந்த பிப்ரவரி 16ஆம் தேதி கர்நாடகா சட்டசபையில் தாக்கல் செய்து பேசினார். மேகதாது அணை விரைவில் கட்டப்படும் என்று கர்நாடகா முதல்வர் சித்தராமையா பேசியதற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வந்தனர்.
இந்த நிலையில், மேகதாதுவில் அணை கட்டிய பிறகு தான் எனது உயிர் பிரியும் என்று முன்னாள் பிரதமரும், ஜனதா தளம்(எஸ்) கட்சியின் மூத்த தலைவருமான தேவகவுடா தெரிவித்துள்ளார். நவம்பர் 20ஆம் தேதி நடைபெறும் இடைத்தேர்தலில் போட்டியிடும் தனது பேரன் நிகில் குமாரசாமிக்காக, தேவகவுடா தேர்தல் பிரச்சாரம் செய்து வருகிறார். இந்த பிரச்சாரத்தின் போது பேசிய அவர், “மேகதாது திட்டம் நிறைவேற வேண்டுமானால், பிரதமர் நரேந்திர மோடியால் மட்டுமே முடியும். அதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால், தமிழகம் எங்கள் வழியில் தடைகளை ஏற்படுத்தியுள்ளது. நான் பிரதமர் நரேந்திர மோடியிடம் முறையிட்டு, நிலைமையின் யதார்த்தத்தை அவரிடம் முன்வைப்பேன். அவர் ஏற்கனவே பலமுறை எனது கோரிக்கைகளுக்கு செவிசாய்த்துள்ளார். மேகதாதுவில் அணை கட்டிய பிறகே எனது உயிர் பிரியும். நிகில் குமாரசாமியை நான் தனிப்பட்ட முறையில் மாநில தலைவராக உயர்த்துவேன். என் தோட்டத்தில் அமர்ந்து கொண்டு, நான் அவரை ஒரு பெரிய தலைவராக்கும் காலம் வரும்” என்று கூறினார்.