புதுச்சேரி சட்டப்பேரவையில் துணைநிலை ஆளுநர் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் உரையுடன் பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கியது.
சட்டப்பேரவையில் திருக்குறளுடன் உரையைத் தொடங்கிய ஆளுநர் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன், அடிக்கடி திருக்குறளை மேற்கோள்காட்டி பேசினார். "அரசு எடுத்த துரித நடவடிக்கையால் புதுச்சேரியில் கரோனா பெருமளவு குறைந்துள்ளது. புதுச்சேரியில் 2020 - 21இல் ரூபாய் 9,000 கோடி வருவாய் எதிர்பார்த்த நிலையில், ரூபாய் 8,419 கோடி வந்துள்ளது. கரோனாவைத் தடுக்க அனைவரும் கரோனா தடுப்பூசிப் போட்டுக்கொள்ள வேண்டும். வருவாயைப் பெருக்கும் வகையில் புதுச்சேரி அரசின் பட்ஜெட் இருக்கும் என நம்புகிறேன். மாடித் தோட்டத்தை ஊக்குவிக்க ரூபாய் 3,000 மதிப்புள்ள விதைகள் அடங்கிய பைகள் 75% மானியத்தில் வழங்கப்படுகின்றன" என ஆளுநர் குறிப்பிட்டுள்ளார்.
புதுச்சேரி சட்டப்பேரவை வரலாற்றில் முதன்முறையாக துணைநிலை ஆளுநர் தமிழில் உரையாற்றினார். புதுச்சேரி சட்டப்பேரவையில் ஆளுநர் உரையும், பட்ஜெட் தாக்கலும் ஒரே நாளில் நிகழ்வது இதுவே முதல்முறையாகும். புதுச்சேரி அரசின் நிதிநிலை அறிக்கை இன்று (26.08.2021) மாலை தாக்கல் செய்யப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.