சிஏஏ எதிர்ப்பாளர்களுக்கு எதிராக சிஏஏ ஆதரவாளர்கள் டெல்லியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடத்திய பேரணிக்கு பின்னர் அங்கு வெடித்த கலவரங்களால், வடகிழக்கு டெல்லியில் உள்ள ஜாப்ராபாத், மஜுபூர், சாந்த்பாக், குரேஜ்காஸ், பாஜன்புரா ஆகிய பகுதிகள் பதட்டமான சூழலை சந்தித்தன.
![delhi police to follow uttarpradesh strategy](http://image.nakkheeran.in/cdn/farfuture/ySESSDBXsMpqV93jEdnte5vDMz1x2Ge5xYEY6xSl-hk/1582962160/sites/default/files/inline-images/xgfnxgf.jpg)
கண்ணீர்புகைக்குண்டுகள் வீசியும், துப்பாக்கிச்சூடு நடத்தியும் போலீசார் கலவரத்தை கட்டுப்படுத்த முயற்சித்தனர். இதனையடுத்து டெல்லி முழுவதும் பாதுகாப்பு நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டு கலவரங்கள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளன. இந்த கலவரத்தில் இதுவரை 42 பேர் பலியாகியுள்ள நிலையில், மேலும் நூற்றுக்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வருகின்றனர்.
இந்த வன்முறை தொடர்பாக தீவிர விசாரணை நடைபெற்று வரும் நிலையில், கலவரம் தொடர்பாக இதுவரை 630 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், 123 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் டெல்லி காவல்துறை தெரிவித்துள்ளது. இந்நிலையில், கலவரத்தில் ஈடுபட்டு பொதுச்சொத்துகளுக்கு சேதம் விளைவித்தவர்களிடம் இருந்து அபராதம் வசூலிக்க டெல்லி காவல்துறை முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. போராட்டத்தின்போது வன்முறையில் ஈடுபட்டவர்களிடம் இருந்து அபராதம் வசூலிக்கும் நடைமுறையை உத்தரப்பிரதேச அரசு அண்மையில் அமல்படுத்திய சூழலில், டெல்லி காவல்துறையும் தற்போது இதனை பின்பற்றி கலவரத்தில் ஈடுபட்டவர்களுக்கு நோட்டீஸ் அனுப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.