2021ஆம் ஆண்டிற்கான உலகக்கோப்பை போட்டிகள், நடைபெற்றுவரும் நிலையில், இந்தியா தான் விளையாடிய இரண்டு ஆட்டங்களிலும் படுதோல்வியடைந்து, அடுத்த சுற்றுக்கான வாய்ப்பை இழக்கும் கட்டத்தில் உள்ளது.
இந்தச் சூழலில் இந்திய அணியின் தொடர் தோல்விகளை அடுத்து, அணியின் கேப்டன் விராட் கோலியை மட்டுமின்றி அவரது குடும்பத்தையும் சிலர் சமூகவலைதளங்களில் வசைபாடி வருகின்றனர். இதில் சிலர், விராட் கோலியின் குழந்தைக்குப் பாலியல் அச்சுறுத்தலும் விடுத்தனர். இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியதோடு, அவர்களின் இந்தச் செயலுக்குக் கடும் கண்டனங்களும் குவிந்தன.
இந்தநிலையில் டெல்லி மகளிர் ஆணையம், விராட்டின் குழந்தைக்கு ஆன்லைனில் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டது தொடர்பாக டெல்லி காவல்துறைக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. விராட் மகளுக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டது தொடர்பான வழக்கின் முதல் தகவல் அறிக்கையின் நகலை அளிக்குமாறும் கைது செய்யப்பட்ட குற்றவாளி குறித்த தகவலைத் தெரிவிக்குமாறும் இதுவரை வழக்கில் எடுக்கப்பட்ட நடவடிக்கையைத் தெரிவுக்குமாறும் அந்த நோட்டீஸில் டெல்லி மகளிர் ஆணையம் கூறியுள்ளது.
ஒருவேளை குற்றவாளி இதுவரை கைது செய்யப்படவில்லை என்றால், குற்றவாளியைக் கைது செய்ய எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை தெரிவிக்குமாறு அந்த நோட்டீஸில் கூறப்பட்டுள்ளது. மேலும், இந்த விவரங்களை நவம்பர் 8ஆம் தேதிக்குள் தருமாறும் டெல்லி காவல்துறையை மகளிர் ஆணையம் அறிவுத்தியுள்ளது.