இந்தியாவில் கரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நாள்தோறும் இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் இரண்டு லட்சத்து 73 ஆயிரத்து 810 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், கடந்த 24 மணி நேரத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்ட 1,619 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் சில மாநில மருத்துவமனைகளில் படுக்கைகளுக்குப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. மேலும் சில மாநிலங்களில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதாக புகார்கள் எழுந்துள்ளன.
இந்திய தலைநகர் டெல்லியிலும் கரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அங்குள்ள மருத்துவமனைகளில் படுக்கைகளுக்கும், ஆக்சிஜனுக்கும் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து டெல்லிக்கு ஆக்சிஜன் வழங்குமாறும், மத்திய அரசின் மருத்துவமனைகளில் கரோனா பாதிக்கப்பட்டவர்களுக்குப் படுக்கைகளை ஒதுக்குமாறும் கோரி, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
இந்தநிலையில், டெல்லியில் 6 நாட்கள் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே டெல்லியில் இரவுநேர ஊரடங்கு உள்ளிட்டவை அமலில் இருந்த நிலையில், கரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வருவதால், இந்த ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று (19.04.2021) இரவு 10 மணியிலிருந்து, வருகிற திங்கள்கிழமை காலை 6 மணிவரை இந்த முழு ஊரடங்கு அமலில் இருக்கும். ஊரடங்கை அறிவித்துள்ள டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், இந்த ஊரடங்கு காலத்தில், கூடுதல் படுக்கைகளுக்கான ஏற்பாடு செய்யப்படும். ஆக்சிஜன், மருந்துகள் உள்ளிட்டவற்றை ஏற்பாடு செய்ய இந்த ஊரடங்கு காலம் பயன்படுத்தப்படும் என தெரிவித்துள்ளார்.
மேலும், புலம்பெயர் தொழிலாளர்களை டெல்லியை விட்டு வெளியேற வேண்டாம் என அரவிந்த் கெஜ்ரிவால் கேட்டுக்கொண்டுள்ளார். இதுகுறித்து அவர், “உங்களை இரு கைகளைக் கூப்பி கேட்டுக்கொள்கிறேன். டெல்லியை விட்டு வெளியேறிச் செல்லாதீர்கள். மீண்டும் ஒரு நீடிக்கப்பட்ட ஊரடங்கு தேவையில்லை என நம்புகிறேன். அரசு உங்களைக் கவனித்துக்கொள்ளும்" என கூறியுள்ளார்.