டெல்லி மதுபானக் கொள்கை வழக்கு தொடர்பாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு 9 முறை அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியும், அவர் ஆஜராகாமல் தவிர்த்து வந்தார். இது தொடர்பாக அவர் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு கடந்த 21 ஆம் தேதி (21.03.2024) விசாரணைக்கு வந்தது. அப்போது அமலாக்கத்துறை நடவடிக்கைக்கு இடைக்காலத் தடை விதிக்க முடியாதென உயர்நீதிமன்றம் தெரிவித்திருந்தது. மேலும் முன் ஜாமீன் வழங்கவும் டெல்லி உயர் நீதிமன்றம் மறுத்திருந்தது. இதனையடுத்து அரவிந்த் கெஜ்ரிவால் வீட்டிற்கு அன்றைய தினமே (21.03.2024) 12 பேர் கொண்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் வருகை தந்து, அவரிடம் விசாரணையும், அவரது வீட்டில் சோதனையும் மேற்கொண்டனர். அதன் பின்னர் அமலாக்கத்துறையால் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டார். மேலும் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஏப்ரல் 15 ஆம் தேதி வரை நீதிமன்றக் காவல் விதிக்கப்பட்டதைத் தொடர்ந்து திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இதற்கிடையே தன்னுடைய கைது நடவடிக்கையை சட்டவிரோத கைது என அறிவிக்கக் கோரியும், ஜாமீன் கோரியும் கெஜ்ரிவால் தரப்பில் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த டெல்லி உயர் நீதிமன்றம், 'முதலமைச்சர் என்பதற்காக எந்த ஒரு சிறப்புச் சலுகையும் காட்ட முடியாது. மதுபானக் கொள்கை முறைகேட்டில் ஈடுபட்டிருப்பதாக கெஜ்ரிவால் மீது அமலாக்கத்துறை குற்றம்சாட்டி உள்ளது. பொது வாழ்வில் உள்ளவர்கள் சலுகைகளுக்கு அப்பாற்பட்டவர்களாக இருக்க வேண்டும். கெஜ்ரிவால் கைது சட்டத்தின் அடிப்படையில் எடுக்கப்பட்டதே தவிர, தேர்தலின் போது எடுக்கப்பட்ட முடிவு அல்ல.
தேர்தல் நேரம் என்பதால் விசாரணைக்கு வர முடியாது என கெஜ்ரிவால் கூறுவதை ஏற்க முடியாது. மற்றவர்களுடன் இணைந்து முறைகேட்டில் கெஜ்ரிவாலும் ஈடுபட்டிருக்கிறார் என்பதை இந்த வழக்கில் காண முடிகிறது. நீதிபதிகள் சட்டத்திற்கு கட்டுப்பட்டவர்கள். அவர்கள் அரசியல் கருத்துகளுக்கு அப்பாற்பட்டவர்கள். நீதிமன்றங்கள் அரசியலுக்குள் செல்ல முடியாது. ஆனால் அரசியல் செயல்பாடுகள் நீதிமன்றத்தின் முன் செல்லாது. தற்போதைய நிலையில் விசாரணை நீதிமன்றத்தின் செயல்பாடுகளில் நாங்கள் தலையிட முடியாது. பொதுவாழ்வில் ஈடுபடும் நபர்கள் அதிக பொறுப்புடன் இருக்கக்கூடியவர்களாக இருக்க வேண்டும்' என தெரிவித்து கெஜ்ரிவால் தரப்பின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து நேற்று (09.04.2024) உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில், டெல்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் தன்னைக் கைது செய்ததை எதிர்த்து தாக்கல் செய்த மனுவை நிராகரித்த டெல்லி உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து அரவிந்த் கெஜ்ரிவால் உச்ச நீதிமன்றத்தில் இன்று (10.04.2024) மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.