இந்தியா உட்பட உலகம் முழுவதும் பல்வேறு பத்திரிகையாளர்கள், அரசியல் தலைவர்கள், சமூக ஆர்வலர்களின் தொலைபேசிகள் ஹேக் செய்யப்பட்டு, ஒட்டுகேட்கப்பட்டதாக சர்ச்சை வெடித்துள்ளது. பெகாசஸ் என்ற உளவு மென்பொருளை இஸ்ரேலைச் சேர்ந்த என்.எஸ்.ஓ குரூப் (NSO GROUP) தயாரித்து விற்பனை செய்து வருகிறது. இந்த மென்பொருளைக் கொண்டு ஒருவரின் தொலைபேசியை ஹேக் செய்து, அவர் என்ன வார்த்தையைத் தட்டச்சு செய்கிறார் என்பது வரை கண்காணிக்க முடியும்.
இந்தநிலையில் இந்த மென்பொருள் மூலம், இந்தியாவில் 40 பத்திரிகையாளர்கள், 3 எதிர்க்கட்சியைச் சேர்ந்த அரசியல் தலைவர்கள், ஒரு உச்சநீதிமன்ற நீதிபதி, பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள இருவர், சமூக ஆர்வலர்கள், தொழிலதிபர்கள் என 300க்கும் மேற்பட்டோர்களின் தொலைபேசி எண்கள் ஹேக் செய்யப்பட்டன அல்லது ஹேக் செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன என 'பெகாசஸ் ப்ராஜெக்ட்' என்ற பெயரில், பெகாசஸ் ஹேக்கிங் குறித்து ஆய்வு செய்த ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. இது பெரிய சர்ச்சையானதுடன், இந்திய நாடாளுமன்றத்திலும் எதிரொலித்தது.
இந்தநிலையில் ஹேக் செய்யப்பட்ட அல்லது ஹேக் செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட தொலைபேசி எண்களின் பட்டியலில் ராகுல் காந்தியின் இரண்டு தொலைபேசி எண்களும், ராகுல் காந்தியின் ஐந்து நண்பர்களின் எண்களும் இடம்பெற்றுள்ளதாக பெகாசஸ் ஹேக்கிங் குறித்து ஆய்வு நடத்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. மேலும் மேற்குவங்க முதல்வர் மம்தா அவரது மருமகன் அபிஷேக் பானர்ஜி, பிரசாந்த் கிஷோர், தற்போதைய தகவல் தொழிற்நுட்பத்துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆகியோரின் எண்களும் இடம்பெற்றுள்ளதாக அந்த ஊடகங்கள் கூறியுள்ளன.