சென்னை பெரம்பூரில் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராகப் பொறுப்பு வகித்து வந்த ஆம்ஸ்ட்ராங்கை நேற்று (06-07-24) அவரது வீட்டின் அருகே இருசக்கர வாகனங்களில் 6 பேர் கொண்ட கும்பல் அரிவாளால் வெட்டி கொலை செய்தனர். பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
அதே சமயம் ஆம்ஸ்ட்ராங் படுகொலையைக் கண்டித்து பெரம்பூரில் பகுஜன் சமாஜ் கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால், அவரது வீட்டின் அருகே 100க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். உணவு டெலிவரி செய்யும் ஊழியர்களைப் போல் உடை அணிந்து கொண்டு வந்த மர்ம நபர்கள் ஆம்ஸ்ட்ராங்கை வெட்டியதாகப் போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் தகவல் வெளியானது.
மாநிலம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்தச் சம்பவத்துக்கு அஞ்சலி செலுத்துவதற்கு நாளை சென்னை வருவதாக பகுஜன் சமாஜ் கட்சியின் தேசியத் தலைவர் மாயாவதி தெரிவித்துள்ளார். இது குறித்து மாயாவதி தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, “தமிழ்நாட்டில் பகுஜன் சமாஜ் கட்சியின் கடின உழைப்பாளி மற்றும் அர்ப்பணிப்புள்ள தலைவரும், மாநில கட்சித் தலைவருமான கே.ஆம்ஸ்ட்ராங் நேற்று மாலை அவரது சென்னை இல்லத்திற்கு வெளியே கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் சமூகம் முழுவதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது. எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க அரசு உடனடியாக கடுமையான மற்றும் தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும். மிகவும் சோகமான மற்றும் கவலையளிக்கும் இந்தச் சம்பவத்தின் தீவிரத்தை கருத்தில் கொண்டு, ஆம்ஸ்ட்ராங்கிற்கு அஞ்சலி செலுத்தவும், துயரத்தில் இருக்கும் அவரது குடும்பத்தினரைச் சந்தித்து ஆறுதல் கூறவும் நாளை காலை சென்னை செல்ல திட்டமிட்டுள்ளேன். அமைதியையும் ஒழுங்கையும் பராமரிக்குமாறு அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.
இதற்கிடையில், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு சம்பவம் தொடர்பாக ஆற்காடு சுரேஷின் சகோதரர் பாலா, ராமு, திருமலை, செல்வராஜ், அருள் உள்ளிட்ட 8 பேரைப் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னையில் கடந்த ஆண்டு ஆற்காடு சுரேஷ் கொலைக்கு பழிக்குப் பழியாக, ஆற்காடு சுரேஷின் சகோதரர் தனது கூட்டாளிகளோடு இந்தக் கொலையை செய்துள்ளதாக பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.