புதுச்சேரி அரசு மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை சார்பில் வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழும் 21 வயது முதல் 55 வயதிற்குட்பட்ட குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 நிதியுதவி வழங்கும் திட்ட துவக்க விழா கதிர்காமம் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. இந்த விழாவில் ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன், முதல்வர் ரங்கசாமி, சபாநாயகர் செல்வம், அமைச்சர்கள் கலந்துகொண்டனர். விழாவில் எந்தவித அரசு உதவித்தொகையும் பெறாத குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கும் திட்டத்தை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன், முதல்வர் ரங்கசாமி ஆகியோர் துவக்கி வைத்தனர்.
இந்த திட்டத்தில் முதற்கட்டமாக 70 ஆயிரம் குடும்பத் தலைவிகள் பயனடைகின்றார்கள். மாதந்தோறும் அவரவர் வங்கிக் கணக்கில் ரூ.1000 வரவு வைக்கப்படுகின்றது. இதன் மூலம் அரசுக்கு மாதம் ரூ.5 கோடி செலவாகின்றது என புதுச்சேரி அரசு தெரிவித்துள்ளது.
இந்த விழாவில் கலந்துகொண்டு முதல்வர் ரங்கசாமி பேசுகையில், “மகளிருக்கு குடும்பத்தில் மரியாதை கொடுக்க வேண்டும் என்பதற்காகத்தான் மகளிர் பெயரில் சொத்து வாங்கினால் பத்திரப்பதிவு செலவில் 50 சதவீத கழிவு வழங்கியது பெண்களுக்கு மிகுந்த பயனளித்து வருகின்றது. அந்த வகையில் தான் குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. எல்லோருக்கும் அரசு உதவித்தொகை கிடைக்கின்றது என்ற நிலையை எனது அரசு உருவாக்கியுள்ளது. எந்த குடும்பமும் சாப்பாடு இல்லை என்ற நிலை இருக்கக்கூடாது என்பதில் அரசு கவனமாக உள்ளது. இந்த அரசு சொன்னதை நிறைவேற்றும் அரசாக உள்ளது” எனக் கூறினார்.
தொடர்ந்து பேசிய ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன், “பெண்களுக்கு கையில் பணம் இருந்தால் அது அவரது குடும்ப நன்மைக்கு உதவும் என்பதை உணர்ந்த அரசு, குடும்பத் தலைவிகளுக்கு உதவித்தொகை வழங்கும் திட்டத்தை துவக்கியுள்ளது. பிரதமர் அலுவலக அதிகாரப்பூர்வ ஆய்வறிக்கையில் அனைத்து திட்டங்களையும் முழுவதுமாக செயல்படுத்துவதில் இந்தியாவிலேயே புதுச்சேரி மாநிலம் முதலிடம் பெற்றுள்ளது. அதுபோல சுகாதாரத்தில் இந்தியாவிலேயே புதுச்சேரி முதலிடம் பெற்று முன்னேறி வருகின்றது என்பதுதான் உண்மை. இந்த அரசு அறிவிக்காததை செய்கின்றது. சில அரசு அறிவித்தும் செய்யவில்லை” எனப் பேசினார்.