கோப்புப்படம்
18வது மக்களவைத் தேர்தல் இந்தியா முழுவதும் ஒவ்வொரு மாநிலமாக நடைபெற்றது. அதன்படி, கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி, முதல் கட்டமாக தமிழகம், மணிப்பூர் உள்ளிட்ட மாநிலங்களில் 18வது ஜனநாயகத் திருவிழா தொடங்கி, ஏப்ரல் 26, மே 7, மே 13, மே 20, மே 25, ஜூன் 1 என ஒவ்வொரு தொகுதிகளிலும் 7 கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடைபெற்று 01-06-24 அன்று 6 மணியுடன் முடிவடைந்தது. 7 கட்டங்களாக நடைபெற்ற தேர்தலில் பதிவான வாக்குகள் ஜூன் 4ஆம் தேதி (இன்று) எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
இன்று வாக்கு எண்ணிக்கை நாள் என்பதால் வாக்கு எண்ணும் மையங்களில் மூன்றடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அதிகாரிகள், முகவர்கள் உள்ளிட்டோர் முன்னிலையில் வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள ஸ்ட்ராங் ரூமில் சீல் அகற்றப்பட்டது. பல்வேறு நடைமுறைகளுக்கு பின் முகவர்கள் வாக்கு எண்ணும் மையத்திற்குள் அனுமதிக்கப்பட்ட நிலையில் நாடு முழுவதும் மொத்தமுள்ள 543 தொகுதிகளில் 542 தொகுதிகளில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியுள்ளது. தமிழகத்தில் 39 தொகுதிகளில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியுள்ளது. முதலாவதாக தபால் வாக்குகள் எண்ணும் பணி நடைபெற்று வருகிறது.3 9 மையங்களில் 243 அறைகளில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியுள்ளது. தமிழ்நாட்டில் மொத்தம் 76 பெண்கள் உட்பட 950 வேட்பாளர்கள் தேர்தல் களத்தில் போட்டியில் உள்ளனர்.
புதுச்சேரியில் இன்னும் வாக்கு எண்ணிக்கை தொடங்காததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. எட்டு மணிக்குள்ளாகவே வாக்கு இயந்திரங்கள் வாக்கு எண்ணும் இடத்திற்கு கொண்டு செல்லப்பட வேண்டிய நிலையில் தற்போது தான் எடுத்துச் செல்லும் பணி நடைபெற்றிருக்கிறது. இதனால் வாக்கு எண்ணும் பணியில் தாமதம் ஏற்பட்டுள்ளது. புதுச்சேரியில் 8 மையங்களில் வாக்கு எண்ணிக்கை மையங்கள் உள்ளது. அதில் 23 சட்டமன்றத் தொகுதிகளைச் சேர்ந்த வாக்குகள் எண்ணப்பட இருக்கிறது. இந்த எட்டு மையங்களில் ஒரே ஒரு மையத்தில் மட்டும் தபாலில் பதிவான வாக்குகள் மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் எண்ணப்படும் பணி நடைபெற்று வருகிறது.