கோரக்பூர் குழந்தைகள் உயிரிழப்பு எண்ணிக்கை 61-ஆக உயர்வு!
கோரக்பூர் பி.ஆர்.டி. மருத்துவமனையில் 42 குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகின. தற்போது 72 மணிநேரத்தில் உயிரிழப்பு எண்ணிக்கை 61-ஆக உயர்ந்துள்ளதாகவும், இந்த எண்ணிக்கை மேலும் உயர வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
உத்தரப்பிரதேசம் மாநிலம் கோரக்பூரில் உள்ள பாபா ராகவ் தாஸ் மருத்துவமனையில், கடந்த சனிக்கிழமையில் இருந்து குழந்தைகள் உயிரிழப்பு ஏற்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகின. மூளைவீக்கம் உள்ளிட்ட பல காரணங்களால் குழந்தைகள் உயிரிழந்ததாகவும், பெரும்பாலான குழந்தைகள் சமீபத்தில் பிறந்தவை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
உபி முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் தொகுதியான கோரக்பூரில் உள்ள இந்த மருத்துவமனையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர், ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் பற்றாக்குறையால் 71 குழந்தைகள் உயிரிழந்தனர். இது நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், தற்போது 61 குழந்தைகள் உயிரிழந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த மருத்துவமனையின் தகவல்கள் படி, மூளைவீக்கம் மற்றும் பிரசவப்பிரிவில் மட்டும் 1,250 குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உபி, பீகார் மற்றும் நேபாளத்தைச் சேர்ந்த மக்கள் சரியான மருத்துவ வசதிகள் இல்லாததால், இந்த மருத்துவமனைக்கு செல்கின்றனர். தொடர் மரணங்களால் அவர்கள் செய்வதறியாது உள்ளனர்.
- ச.ப.மதிவாணன்