கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம், சேஷசமுத்திரம், மாதவச்சேரி ஆகிய பகுதிகளில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 19 ஆம் தேதி விஷ சாராயம் குடித்ததில் 229 பேர் பாதிக்கப்பட்டனர். இதில் 68 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.
நாட்டையே உலுக்கிய இந்த சம்பவம் தொடர்பாக விழுப்புரம் சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்குப்பதிந்து சென்னையைச் சேர்ந்த கவுதம்சந்த், பன்ஷில்லால், சிவக்குமார், கருணாபுரத்தை சேர்ந்த கண்ணுக்குட்டி என்கிற கோவிந்தராஜ், இவருடைய மனைவி விஜயா. தாமோதரன், பரமசிவம், முருகேசன், சேஷசமுத்திரத்தை சேர்ந்த சின்னதுரை, விரியூரை சேர்ந்த ஜோசப், சூ.பாலப்பட்டை சேர்ந்த கதிரவன், கண்ணன், புதுச்சேரி மடுகரையை சேர்ந்த மாதேஷ், சாகுல் ஹமீது, கடலூர் மாவட்டம் பண்ருட்டியை சேர்ந்த சக்திவேல், மாதவச்சேரியை சேர்ந்த ராமர், சடையன், செந்தில், ஏழுமலை, ரவி, அய்யாசாமி, அரிமுத்து, தெய்வீகன்,வேலு ஆகிய 24 பேரைக் கைது செய்து கடலூர் மத்தியச் சிறையில் அடைத்தனர்.
இந்த நிலையில் இந்த வழக்கில் தொடர்புடைய அரிமுத்துவிற்கு ஜாமீன் வழங்கப்பட்டது. மேலும் சிறையில் அடைக்கப்பட்டிருந்த சூ.பாலப்பட்டு பகுதியைச் சேர்ந்த கண்ணன்(40), ரிஷிவந்தியத்தை சேர்ந்த அய்யாசாமி(45) ஆகியோர் ஜாமீன் கேட்டு கள்ளக்குறிச்சி மாவட்ட தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஸ்ரீராம், கண்ணன், அய்யாசாமி ஆகியோருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.