இமாச்சல்பிரதேசம் மாநில தலைநகர் சிம்லாவில் தலைவிரித்தாடும் தண்ணீர்ப் பஞ்சத்தால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர்.
![simla](http://image.nakkheeran.in/cdn/farfuture/Q6GXSnhaqqgNNzBLzDwRWatDpngvXyqh--UgOsol7FQ/1533347634/sites/default/files/inline-images/Simla.jpg)
கோடைகாலம் தொடங்கியதில் இருந்து நாட்டில் உள்ள பெரும்பாலான நகரங்களில் தண்ணீர்ப் பற்றாக்குறை ஏற்பட்டது. அதன்படி, இமாச்சல்பிரேதசம் மாநில தலைநகர் சிம்லா மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தண்ணீர்ப் பஞ்சம் பொதுமக்களுக்கு பெருத்த நெருக்கடியைத் தந்துள்ளது. சிம்லா மட்டுமின்றி காசும்படி, சோட்டா சிம்லா, விசாக்நகர், பட்யோக், கங்க்னா தார் மற்றும் நியூ சிம்லா உள்ளிட்ட பகுதிகளில் இந்த தண்ணீர்ப்பஞ்சத்தின் தாக்கம் பரவியுள்ளது.
இந்நிலையில், கடந்த ஏழு நாட்களாக நீடிக்கும் தண்ணீர்ப்பஞ்சத்தைக் கட்டுக்குள் கொண்டுவர பல்வேறு நடவடிக்கைகள் அங்கு மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நகரை மூன்று மண்டலங்களாக பிரித்து ஆங்காங்கே தண்ணீர் டேங்குகளை நிறுவி, மக்களின் தண்ணீர்த் தேவைகள் பூர்த்தி செய்யப்படுகின்றன. இருப்பினும், முக்கியஸ்தர்களுக்கே அதிகளவு தண்ணீர் வழங்கப்படுவதாக எழுந்த குற்றச்சாட்டுகளை அடுத்து, நேற்று பொதுமக்கள் முதல்வர் ஜெய்ராம் தாக்கூரின் இல்லத்தை முற்றுகையிட்டனர். அப்போது காவல்துறையினர் மற்றும் பொதுமக்கள் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது.
நாளொன்றுக்கு 42 மில்லியன் லிட்டர் தண்ணீர் தேவை இருக்கும் நிலையில், தண்ணீர் சப்ளை 22 மில்லியன் லிட்டராக இப்போது குறைந்துள்ளது. பொதுமக்கள் வீதிகளில் பாத்திரங்களுடன் தண்ணீர் தேடி அலையும் சூழலில், சுற்றுலாப்பயணிகள் வரவேண்டாம் என பொதுமக்களே தெரிவிக்கத் தொடங்கியுள்ளனர். இதே காரணத்தால் தங்கும்விடுதிகளும் சுற்றுலாப்பயணிகளின் அழைப்பை ஏற்பதில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.