ஜம்மு- காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை நீக்குவதாக மத்திய அரசு நேற்று அறிவித்தது. மேலும் காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்தை வழங்கும் சட்டப்பிரிவு 370, 35A ஐ குடியரசுத்தலைவர் ஒப்புதலுடன் மத்திய அரசு நீக்கியது. அத்துடன் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை இரண்டாக பிரித்து ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் என இரு யூனியன் பிரதேசங்கள் உருவாக்கப்படும் என மத்திய அரசு அறிவித்தது. இது தொடர்பான மசோதாக்கள் மாநிலங்களவையில் நேற்று நிறைவேறிய நிலையில், மக்களவையில் காஷ்மீர் மசோதாக்கள் மீதான விவாதம் நடைபெற்றது. இந்த விவாதத்தில் காஷ்மீர் விவகாரங்கள் தொடர்பாக மத்திய அரசு எடுத்த முடிவு குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மக்களவையில் விளக்கம் அளித்து வருகிறது.
அதில் காஷ்மீர் விவகாரத்தில் பாஜக அரசு எடுத்த முடிவு நல்லதா? கெட்டதா? என்பதை காலம் முடிவு செய்யும் எனவும், காஷ்மீர் பிரிவினைவாதிகளுடன் பேச்சுவார்த்தை என்ற பேச்சுக்கே இடமில்லை என்றார். அடுத்த ஐந்து ஆண்டுகளில் ஜம்மு- காஷ்மீர் வளர்ச்சி பாதைக்கு செல்லும் என குறிப்பிட்டுளார். மேலும் காஷ்மீர் பற்றி பேசும் போது எல்லாம் பிரதமர் நரேந்திர மோடி நினைவுக்கு வருவார் என்று கூறினார். சிறப்பு அந்தஸ்தை வழங்கும் சட்டப்பிரிவை நீக்கம் தொடர்பான அறிவிப்பு வெளியான போதும், ஜம்மு- காஷ்மீரில் தொடர்ந்து அமைதி நிலவி வருவதாக குறிப்பிட்டார்.
மத்திய அமைச்சர் அமித்ஷாவின், விவாதத்திற்கு பிறகு வாக்கெடுப்பு மூலம் காஷ்மீர் பிரிப்பு மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. நாடாளுமன்றத்தில் இரு அவைகளிலும் காஷ்மீர் மசோதாக்கள் நிறைவேறியதை தொடர்ந்து காஷ்மீர் இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்படுகிறது. ஜம்மு- காஷ்மீர் யூனியன் சட்டப்பேரவை கொண்டதாகவும், லடாக் யூனியன் சட்டப்பேரவை இல்லாததாகவும் பிரிக்கப்படவுள்ளது. அதனை தொடர்ந்து மக்களவை கூட்டத்தொடரை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார் மக்களவை சபாநாயகர் ஓம்.பிர்லா.