இந்தியாவில் கரோனா இரண்டாவது அலை தீவிரமாகி வருகிறது. இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்கள், பல்வேறு கரோனா தடுப்பு கட்டுப்பாடுகளை அமல்படுத்தியுள்ளன. மேலும் பிரதமர் மோடி, இன்று (14.04.2021) மாநில ஆளுநர்களுடன் ஆலோசனை நடத்த இருப்பதாக மத்திய அரசின் அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்தநிலையில், இந்தியாவில் தினசரி கரோனா கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை இரண்டு லட்சத்தை நெருங்கியுள்ளது. நேற்று ஒரேநாளில் ஒரு லட்சத்து 84 ஆயிரத்து 372 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. மேலும், கரோனாவால் இறப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 1,027 பேர் கரோனாவிற்கு பலியாகியுள்ளனர்.
மஹாராஷ்ட்ரா மாநிலத்தில் நேற்று ஒரேநாளில் 60,212 பேருக்கு கரோனா உறுதியாகியுள்ளது. அம்மாநிலத்தில் 15 நாட்கள் பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் தலைநகர் டெல்லியில் 13,468 பேருக்கும், உத்தரப்பிரதேசத்தில் 18 ஆயிரத்து 21 பேருக்கும் கரோனா தொற்று உறுதியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.