கர்நாடகா மாநிலத்தில் ஹிஜாப் தொடர்பான போராட்டங்கள் தற்போது வரை தொடர்ந்து வருகிறது. தொடர்ந்து ஹிஜாப் அணிவதற்கு ஆதரவாகவும், எதிர்ப்பாகவும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், ஹிஜாப்புக்கு எதிரான போராட்டக்காரா்கள் மத்தியில் ஒரு மாணவி 'அல்லாஹு அக்பர்' முழக்கமிட்டு செல்லும் வீடியோ காட்சிகள் வெளியாகி இருந்தது. முஸ்கான் என்ற அந்த மாணவியின் கோஷத்தை தொடர்ந்து அவரை சூழ்ந்து கொண்ட போராட்டக்காரர்கள் காவி துண்டுடன் அந்த மாணவிக்கு எதிராக கோஷமிட்டனர். இந்த சம்பவம் தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலானது.
இதனைத்தொடர்ந்து 'அல்லாஹு அக்பர்' என முழக்கமிட்ட மாணவி முஸ்கானுக்கு பாராட்டு தெரிவித்து அல்கொய்தா தலைவன் ஐமன் அல் ஜாவரி 9 நிமிட வீடியோ வெளியிட்டுள்ளார். இந்த செய்தி மாணவி முஸ்கானின் குடும்பத்திற்கு பேரதிர்ச்சியை கொடுத்துள்ளது. அல்கொய்தா அமைப்புக்கும் எங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும், தங்களை நிம்மதியாக வாழ விடுங்கள் என்றும் முஸ்கானின் தந்தை வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்த பிரச்சனையைத் தூண்டி மேலும் மோதல்களை உருவாக்க நினைக்கிறார்கள். எங்களது மகளின் புகைப்படங்கள் பயங்கரவாதிகளின் சுவரொட்டிகளில் இடப்பெறுவதை தாங்கள் விரும்பவில்லை எனவும் மாணவி முஸ்கானின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.