ஹரியானா மாநிலம் ஜிந்த் மாவட்டத்தில் அமைந்துள்ளது பஞ்ச்குலா ஊராட்சி. இந்த பகுதியில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 500க்கும் மேற்பட்ட மாணவிகள் படித்து வருகின்றனர். இங்கு தலைமையாசிரியராக இருப்பவர் கர்த்தார் சிங். இவருக்கு 55 வயதாகிறது. இவர், கடந்த பல ஆண்டுகளாக இந்த பள்ளியில் தலைமையாசிரியர் பணியில் உள்ளார்.
இந்நிலையில், கர்த்தார் சிங் தனது பள்ளியில் படிக்கும் 10ஆம் வகுப்பு மாணவிகளுக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த மாணவிகள் என்ன செய்வது என தெரியாமல் திகைத்து போயிருந்தனர். மேலும், இந்த விவகாரத்தை வெளியே சொல்ல முடியாமல் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி வந்தனர். இதற்கிடையில், தலைமையாசிரியர் கொடுக்கும் பாலியல் தொல்லைகள் குறித்து சக ஆசிரியைகளிடம் கூறியுள்ளனர். ஆனால், அவர்களோ இந்த விஷயத்தை மூடி மறைக்கவே முயற்சித்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், பாதிக்கப்பட்ட மாணவிகள் இச்சம்பவம் குறித்து செப்டம்பர் 14 ஆம் தேதியில் அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். ஆனால், அந்த புகாரை எடுத்துக்கொண்ட போலீசார் கடந்த ஒன்றரை மாதத்திற்கு மேல் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
ஒருகட்டத்தில் விரக்தியடைந்த 15 பள்ளி மாணவிகள் இந்திய குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு, பிரதமர் மோடி, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி உள்ளிட்டோருக்கு 15 பக்க கடிதம் ஒன்றை அனுப்பியிருந்தனர். அந்த கடிதத்தில், தங்கள் பள்ளியில் தலைமையாசிரியராக இருப்பவர் கர்த்தார் சிங். அவர் தங்களுக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வருகிறார். மேலும், இந்த விஷயத்தை வெளியே சொன்னால் செய்முறை தேர்வு மதிப்பெண்களை குறைத்துவிடுவேன் என மிரட்டுவதாகவும் குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில், இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், ஹரியானா மாநில மகளிர் ஆணையம் தானாக முன்வந்து இந்த வழக்கை விசாரிக்க உத்தரவிட்டது.
அப்போது, போலீசார் மேற்கொண்ட விசாரணையில், பல்வேறு அதிர்ச்சியளிக்கும் தகவல்கள் வெளியானது. தலைமையாசிரியர் கர்த்தார் சிங் இதுவரை 50க்கும் மேற்பட்ட பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளது தெரியவந்தது. அதே வேளையில், பாதிக்கப்பட்ட மாணவிகள் அனைவரும் மைனர்கள். இந்த விவகாரம் பூதாகரமாக வெடித்த நிலையில், குற்றம்சாட்டப்பட்ட கர்த்தார் சிங் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். அதன்பிறகு, அவர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் தலைமறைவாக இருந்த கர்த்தார் சிங்கை தனிப்படை அமைத்து வலைவீசி தேடி வந்தனர். இந்நிலையில், போலீசாருக்கு தண்ணி காட்டி வந்த கர்த்தார் சிங் தற்போது அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும், அவரிடம் போலீசார் மேற்கொண்ட விசாரணையில்.. தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார். இதையடுத்து, கர்த்தார் சிங் மீது போக்சோ பாதுகாப்பு சட்டம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். அதைத்தொடர்ந்து, கர்த்தார் சிங்கால் வேறு மாணவிகள் யாரேனும் பாதிக்கப்பட்டார்களா? என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், பாதிக்கப்பட்ட மாணவிகளுக்கு உளவியல் ஆலோசனைகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தற்போது, ஹரியானா மாநிலத்தில் ஒரே பள்ளியில் 50க்கும் மேற்பட்ட பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்ட சம்பவம், பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
- சிவாஜி