அண்மையில் கொல்கத்தா மாநகராட்சித் தேர்தல் நடைபெற்ற நிலையில், தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று (21.12.2021) எண்ணப்பட்டன. இதில் கொல்கத்தா மாநகராட்சியில் உள்ள 144 வார்டுகளில் 134 வார்டுகளை ஆளும் திரிணாமூல் காங்கிரஸ் வென்றுள்ளது. பாஜக மூன்று வார்டுகளையும், இடதுசாரிகளும் காங்கிரசும் தலா இரண்டு வார்டுகளை வென்றுள்ளன.
சுயேச்சைகள் மூன்று வார்டுகளை வென்றுள்ளனர். பதிவான மொத்த வாக்குகளில், திரிணாமூல் காங்கிரஸ் 71.95 சதவீத வாக்குகளைப் பெற்றுள்ளது. இடதுசாரிகள் 11.13 சதவீத வாக்குகளையும், பாஜக 8.4 சதவீத வாக்குகளையும், காங்கிரஸ் 4.47 சதவீத வாக்குகளையும், சுயேச்சைகள் 3.25 சதவீத வாக்குகளையும் பெற்றுள்ளனர்.
இந்த மாபெரும் வெற்றிகுறித்து பேசிய மம்தா, "பாஜக, காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் போன்ற சில தேசிய கட்சிகள் நமக்கு எதிராகப் போட்டியிட்டன. அவையனைத்தும் தோற்கடிக்கப்பட்டுள்ளன. இந்த வெற்றி, வரும் காலத்தில் தேசிய அரசியலில் வழியைக் காட்டும்" என கூறியுள்ளார்.
இந்த ஆண்டு மேற்கு வங்கத்தில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில், மொத்தமுள்ள 294 தொகுதிகளில் 292 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. அதில் மம்தா பானர்ஜியின் திரிணாமூல் காங்கிரஸ் 215 இடங்களில் வெற்றிபெற்று மூன்றாவது முறையாக ஆட்சியைப் பிடித்தது. இந்தச் சூழலில் தற்போது கொல்கத்தா மாநகராட்சித் தேர்தல் முடிவுகள், திரிணாமூல் காங்கிரசின் செல்வாக்கு கொஞ்சமும் குறையாததையே காட்டுகிறது.