இந்தியாவில் கரோனா பாதிப்பு அதிகம் உள்ள தமிழகம், கர்நாடகா, பீகார், உத்தரகாண்ட், ஹிமாச்சல் பிரதேசம், கோவா, அசாம், சண்டிகர், மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களின் ஆட்சியர்கள் மற்றும் மாநில முதல்வர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி இன்று (18/05/2021) காலை 11.00 மணிக்கு காணொளி மூலம் ஆலோசனை நடத்தினார்.
இந்த ஆலோசனையில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், தலைமைச் செயலாளர் முனைவர் வெ. இறையன்பு, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன், சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி, அரசு உயரதிகாரிகள், கரோனா பாதிப்பு அதிகம் உள்ள மாவட்டங்களின் ஆட்சியர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மாநில அரசுகள் மேற்கொண்டு வரும் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து பிரதமர் கேட்டறிந்தார்.
ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, "கரோனாவுக்கு எதிரான போரில் ஒவ்வொரு உயிரையும் காப்பாற்ற வேண்டும். மாவட்டங்களில் கரோனாவைக் கட்டுப்படுத்தப் பரிசோதனையைத் தீவிரப்படுத்த வேண்டும். ஒவ்வொரு மாவட்ட மருத்துவமனையிலும் ஆக்சிஜன் ஆலை நிறுவும் பணி பி.எம்.கேர்ஸ் நிதி மூலம் நடக்கிறது. ஏற்கனவே, பல மருத்துவமனைகளில் பி.எம்.கேர்ஸ் நிதி மூலம் ஆக்சிஜன் ஆலைகள் செயல்படத் தொடங்கியுள்ளன" எனத் தெரிவித்தார்.