இந்தியாவில் இரண்டு நாட்களுக்குப் பிறகு தினசரி கரோனா பாதிப்பு 30 ஆயிரத்துக்கும் அதிகமாக உயர்ந்துள்ளது. இரண்டாம் அலை உச்சத்தின்போது இந்தியாவில் தினசரி கரோனா பாதிப்பு எண்ணிக்கை 4 லட்சத்தைக் கடந்திருந்த நிலையில், தற்போது பாதிப்பு எண்ணிக்கை குறைந்துவருகிறது. கடந்த 15 நாட்களாக தினசரி 30 முதல் 40 ஆயிரம் வரை தொற்று பதிவாகிவந்த நிலையில், கடந்த இரண்டு நாட்களாக இந்த எண்ணிக்கை 26 ஆயிரம் என்ற அளவில் இருந்துவந்தது.
இதற்கிடையே, இன்று (23.09.2021) மீண்டும் 31 ஆயிரம் என்ற அளவில் தொற்று எண்ணிக்கை உயர்ந்துள்ளது. நேற்று முன்தினம் 26,115, நேற்று 26,964 என பதிவான தொற்று, இன்று 31,923 என்ற அளவில் பதிவாகியுள்ளது. மேலும், ஒரே நாளில் 31,990 பேர் குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதன் மூலம் குணமானவர்களின் எண்ணிக்கை 3.28 கோடியாக உயர்ந்துள்ளது. நாட்டில் இதுவரை 3.35 கோடி பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கரோனா தொற்று காரணமாக 282 பேர் உயிரிழந்த நிலையில், மொத்தமாக இதுவரை 4.46 லட்சம் பேர் பலியாகியுள்ளனர். மேலும், நேற்று ஒரே நாளில் 71.38 லட்சம் பேருக்குத் தடுப்பூசி செலுத்தப்பட்டது. இதன் மூலம் தடுப்பூசி செலுத்தப்பட்டோரின் எண்ணிக்கை 83.39 கோடியாக உயர்ந்துள்ளது.