தீவிரவாதிகளினால் பிரதமர் நரேந்திர மோடியின் உயிருக்கு எப்போதும் இல்லாத வகையில் அச்சுறுத்தல்கள் இருப்பதால், அவர் அருகே அமைசர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த 7 ஆம் தேதி மஹாராஷ்ட்ரா மாநில காவல்துறையினர்கள் புனே நீதிமன்றத்தில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை செய்யப்பட்டதை போன்று பிரதமர் நரேந்திர மோடியை கொல்ல மாவோயிஸ்டுகள் சதித்திட்டம் தீட்டி இருப்பதாக தெரிவித்துள்ளனர். இது மவோயிஸ்டுகள் கைது செய்யப்பட்டபோது அவர்கள் வீட்டில் கைப்பற்ற பட்ட கடிதத்தின் மூலமாக தெரியவந்ததாகவும் தெரிவித்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், மத்திய உள்துறை செயலாளர் ராஜீவ் கவுபா மற்றும் உயர் அதிகாரிகள் கூட்டத்தை கூட்டி மோடியின் பாதுகாப்பை அதிகரிக்க முடிவு செய்தனர். அதேபோல மோடிக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது. பிரதமரின் சிறப்பு பாதுகாப்பு பிரிவின் அனுமதியின் பேரிலேயே அமைச்சர்கள், உயர் அதிகாரிகள் பிரதமர் அருகே செல்லலாம் என்று உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
2019 ஆம் ஆண்டின் நாடாளுமன்றத் தேர்தலில் முக்கிய நபராக மோடி இருப்பார். அப்போது அவரது உயிருக்கு ஆபத்து வரலாம் என்று கூடுதல் பாதுகப்பு அளிக்கப்பட்டுள்ளது. சிறப்பு பாதுகாப்பு பிரிவு பிரதமர் மோடியை, நாடாளுமன்றத் தேர்தல்வரை சாலைகளில் நடந்து செல்வது, திறந்த வாகனங்களில் செல்வது போன்ற விஷயங்களை தவிர்க்க வெண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளது. மேலும், மக்களுடன் கைகுலுக்குவது, மாலைகள், பூச்செண்டுகளை பெற்றுக்கொள்வது என அதையும் தவிர்க்குமாறு கேட்டுக்கொண்டுள்ளது, சிறப்பு பாதுகாப்பு பிரிவு. இது சம்மந்தமான பாதுகாப்பு ஏற்பாடுகள், புதிய விதிமுறைகளை மத்திய உள்துறை வெளியிட்டுள்ளது.