கரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் இந்தியா முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதன்பின் தொற்று பரவலின் அளவு சற்று கட்டுக்குள் வந்ததை அடுத்து, ஊரடங்கில் தளர்வுகள் கொடுக்கப்பட்டன. அதேசமயம், கரோனா தொற்றுக்கான தடுப்பூசிகள் கண்டறியும் பணியும் வேகமாக நடந்துவந்தது.
இந்தியாவில் ‘கோவாக்ஸின்’ மற்றும் ‘கோவிஷீல்டு’ ஆகிய தடுப்பு மருந்துகள் கண்டறியப்பட்டு மத்திய அரசு ஒப்புதலுடன் கடந்த 16ஆம் தேதி முதல் மக்கள் பயன்பாட்டிற்கு வந்தன.
இந்நிலையில், நாடு முழுவதும் கரோனா தடுப்பூசியை ஒருநாள் இடைவெளிவிட்டு போட மாநிலங்களுக்கு மத்திய சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. பெரிய மாநிலங்களில் வாரத்தில் 4 நாட்களுக்கு மேல் தடுப்பூசி போட வேண்டும். சிறிய மாநிலங்களில் 4 நாட்களுக்கும், யூனியன் பிரதேசங்களில் 2 நாட்களுக்கும் தடுப்பூசி போட வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.
அதேவேளையில், தமிழகத்தில் வாரத்தில் 7 நாட்களும் கரோனா தடுப்பூசி போட மாநில சுகாதாரத்துறை திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.