2019 டிசம்பரில் தொடங்கிய கரோனா வைரஸ் பரவல், இன்றும் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இரண்டாம் அலையாக, உருமாறிய கரோனா வைரஸ் பரவி வரும் சூழலில் பல நாடுகள் முழு ஊரடங்கை அமல்படுத்திக் கொண்டிருக்கின்றன.
இந்நிலையில் 5ஜி தொலைபேசி சேவைக்காக அமைக்கப்பட்டுள்ள செல்ஃபோன் டவர்கள்தான் கரோனா இரண்டாம் அலைக்கு முக்கிய காரணம் என்ற தகவல் சமூக வலைதளங்களில் பரவிவருகிறது. குறிப்பாக உத்திரப்பிரதேசம், பீகார், அரியானா போன்ற வட மாநிலங்களில் வாட்ஸ்அப், ஃபேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களில் இரண்டு வாரங்களாக இந்த தகவல்கள் பரவி வருகின்றன.
இது போன்ற தகவல்கள் ஆதாரம் இல்லாதவை என்றும், இதுபோன்ற பொய் தகவல்களை சமூக வலைதளங்களில் பரப்பக்கூடாது எனவும் கூறியுள்ள இந்திய செல்ஃபோன் சேவை நிறுவனங்களின் சங்கம், இந்த தகவல்களை உடனே சமூக வலைத்தளத்தில் இருந்து நீக்க வேண்டும் என்று மத்திய அரசை கேட்டுக் கொண்டுள்ளது.
இந்தியாவைப் பொருத்தவரை 5ஜி சேவை என்பது எங்கும் தொடங்கப்படாத நிலையில், கரோனா பரவுவதற்கு செல்ஃபோன் டவர்கள்தான் காரணம் என்று வதந்தி பரப்பப்பட்டு வருவதாக இந்திய செல்ஃபோன் சேவைகள் சங்கம் தெரிவித்துள்ளது. குறிப்பாக இது போன்ற தகவல்கள் வட மாநிலங்களில் வேகமாக பரவுவதாக குறிப்பிட்டுள்ளது.
ஏற்கனவே வடமாநிலங்களில் மாட்டு சாணத்தால் குளித்தால் கரோனா வராது என்பது போன்ற செய்திகளும் படங்களும் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியிருந்த நிலையில், தற்போது இந்த கருத்தும் விவாதத்துக்கு உள்ளாகியிருக்கிறது.