கரோனா வைரஸ் பரவலைத் தடுப்பதில் இந்தியா முன்மாதிரியாகச் செயல்பட்டு வருகிறது என மைக்ரோசாஃப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் பாராட்டுத் தெரிவித்துள்ளார்.
பில்கேட்ஸுடன் பிரதமர் நரேந்திர மோடி நேற்று முன்தினம் காணொலி காட்சி மூலம் உரையாடினார். கரோனா வைரஸுக்கு மருந்து மற்றும் தடுப்பூசி கண்டுபிடிப்பது, வைரஸ் பரவலைத் தடுப்பது குறித்து இருவரும் ஆலோசனை நடத்தியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த உரையாடல் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்த பிரதமர் மோடி, "கேட்ஸ் அறக்கட்டளையின் வைரஸ் தடுப்புப் பணிகள், வைரஸுக்கான மருந்து கண்டுபிடிக்கும் ஆராய்ச்சி, தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவது குறித்து பில்கேட்ஸுடன் ஆலோசனை நடத்தப்பட்டது " எனத் தெரிவித்திருந்தார்.
அதேபோல இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள பில்கேட்ஸ், "கரோனா வைரஸ் பரவலை தடுக்கவும், பொருளாதாரச் சரிவைக் குறைக்கவும் உலக நாடுகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றன. இதில் வைரஸ் பரவலைத் தடுப்பதில் இந்தியா முன்மாதிரியாகச் செயல்பட்டு வருகிறது. வைரசைக் கட்டுப்படுத்த ஒட்டுமொத்த உலக நாடுகளும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். பிரதமர் நரேந்திர மோடியின் பங்களிப்புக்காக நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.