கடந்த வருடம் ஜம்மு காஷ்மீரில் தேர்தல் நடந்துகொண்டிருந்த சமயத்தில், அங்கு வழக்கம்போல நடக்கும் வன்முறைகளும் நடந்து கொண்டிருந்தன. ஃபரூக் அகமத் தார் என்ற வாலிபனை கற்கள் வீசித் தாக்கியதாகக் குற்றம் சாட்டி, அந்த வாலிபரை தன் கார் பேனட்டின் முன்பு கயிற்றால் அவர் கை கால்களை கட்டி, வீசப்படும் கல்வீச்சுகளுக்கு அவரை ஒரு கவசமாய் பயன்படுத்தினார். இரும்புகளாலும், மரத்தினாலும் செய்யப்பட்ட கவசம் பார்த்தவர்கள், மனிதனையே கவசமாக பயன்படுத்தியது பார்த்து பெரும் சர்ச்சையை இந்தியா முழுவதும் பரவியது. இதற்கு பலதரப்பு கட்சிகள், மனித உரிமை மீறல் கமிஷன் போன்ற பலரும் கண்டனத்தைத் தெரிவித்தனர். இத்தகைய கொடூர செயலை செய்தவர் இராணுவ அதிகாரியான மேஜர் லீதுல் கோகாய்.

இவர் தற்போது மேலும் ஒரு சர்ச்சையில் சிக்கியுள்ளார். நேற்று ஸ்ரீநகரில் உள்ள ஒரு ஹோட்டலில் ஊழியர்களுக்கும் இவருக்கும் வாக்குவாதம், கைகலப்பு ஏற்பட்டு போலீஸ் அழைக்கப்பட்டது. விசாரித்ததில் இராணுவ ஆதிகாரி கோகாய் கடந்த 23ஆம் தேதி அன்று ஆன்லைன் மூலம் ஸ்ரீநகரில் உள்ள அந்த ஹோட்டலில் ரூம் ஒன்றை முன்பதிவு செய்துள்ளார். நேற்று இராணுவ அதிகாரி, ஒரு இளம்பெண் மற்றும் கார் டிரைவருடன் அறைக்கு செல்லும்பொழுது ஹோட்டல் ஊழியர்கள் அந்தப் பெண் உள்ளே செல்ல அனுமதிக்கவில்லை. அந்தப் பெண் அதே ஊரைச் சேர்ந்தவர், அதனால் அறைக்கு பெண்ணுடன் செல்ல அனுமதியில்லை என்று அவர்கள் கூற, கோபமான மேஜர் அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அது சண்டையாக மாற, ஹோட்டல் நிர்வாகம் போலீஸை அழைத்தது. காவலர்கள், அவர்களை விசாரிக்க கான்யார் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர்.

விசாரணை முடிந்த பின் லீதுல் கோகாயை விடுவித்துவிட்டனர். வேலை சம்மந்தமாகவே அந்தப் பெண்ணை சந்திக்க வந்ததாகத் தெரிவித்துள்ளார். உடன் இருந்த இருவரிடமும் விசாரணை தொடர்ந்தது. ஹோட்டலுக்கு அழைத்து வரப்பட்ட பெண்ணுக்கு பதினெட்டு வயது என்று தெரிவித்துள்ளனர். இருந்தபோதிலும் அவர் மைனராக இருக்கக்கூடும் என்று சந்தேகத்தின்பேரில் விசாரணை நடக்கிறது. அந்தப் பெண், தான் கட்டாயத்தின் பேரில் அங்கு வரவில்லையென்றும் அது சாதாரண சந்திப்புதான் என்றும் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே வாலிபரை ஜீப்பில் கட்டி சென்ற சர்ச்சையில் விசாரணை தொடர்கிறது. இந்த சர்ச்சை அதிகாரி தற்போதும் ஒரு சர்ச்சையில் மாட்டியிருக்கிறார்.