பாஜகவின் தேசிய செய்தி தொடர்பாளராக இருந்த நுபுர் சர்மா, ஒரு தனியார் தொலைக்காட்சி விவாதத்தில் நபிகள் நாயகத்தை இழிவுபடுத்தும் வகையில் பேசியதாக அண்மையில் சர்ச்சை எழுந்தது. அதேபோல, மற்றொரு பாஜக நிர்வாகியான நவீன் ஜிண்டால் என்பவர் சமூகவலைதளத்தில் நபியை இழிவுபடுத்திப் பதிவு செய்தார். இதற்கு, இந்தியாவிலும், அரபு நாடுகளிலும் மிகப்பெரிய எதிர்ப்பு எழுந்தது. சவுதி அரேபியா உள்ளிட்ட நாடுகளில் இந்தியப் பொருட்களைப் புறக்கணிப்போம் என்ற முழக்கத்தை முன்னெடுக்கும் வரை இந்த பிரச்சனை பூதாகரமானது.
தற்பொழுது வரை இதுதொடர்பான போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், ராஜஸ்தானில் இவ்விவகாரம் தொடர்பாக தையல் கடை உரிமையாளர் ஒருவர் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் தையல் கடை வைத்திருந்த கண்ணையா லால் என்பவர் நுபுர் சர்மாவுக்கு ஆதரவான கருத்துக்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு வந்த நிலையில், அவர் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளது அங்கு பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக கொலையாளிகள் வெளியிட்டதாக சொல்லப்படும் வீடியோவில், பிரதமர் நரேந்திர மோடிக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த கொலையை கண்டித்து அப்பகுதி மக்கள் கடைகளை அடைத்து போராட்டம் நடத்தினர். அங்கு பதற்றமான சூழல் நிலவிவரும் நிலையில், உதய்ப்பூரில் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், அடுத்த 24 மணி நேரத்துக்கு இணையதள சேவை அங்கு முடக்கப்பட்டுள்ளது. இதனிடையே, இந்த கொலையில் சம்பந்தப்பட்டவர்களை தேடிவந்த நிலையில் தற்பொழுது குற்றவாளிகளை போலீசார் கைது செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.