உத்தரப்பிரதேசத்தில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலுக்குப் பிறகு இரண்டே வருடங்களில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளதாலும், நாட்டிலேயே அதிக நாடாளுமன்றத் தொகுதிகளைக் கொண்ட மாநிலம் உத்தரப்பிரதேசம் என்பதாலும் அம்மாநில சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்கு மிகுந்த எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலத்தின் ஆளுங்கட்சியான பாஜகவும், சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும் சட்டப்பேரவை தேர்தலை எதிர்கொள்வதற்கான பணிகளைத் தொடங்கியுள்ளன. மேலும், பீகார் ஆளுங்கட்சியான ஐக்கிய ஜனதா தளம், மஹாராஷ்ட்ரா ஆளுங்கட்சியான சிவசேனா உள்ளிட்ட கட்சிகளும் உத்தரப்பிரதேச தேர்தலில் களமிறங்கவுள்ளன.
இந்தநிலையில், காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான சல்மான் குர்ஷித், உத்தரப்பிரதேச சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி கூட்டணி அமைக்காது என தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர், "வரவிருக்கும் உத்தரப்பிரதேச சட்டமன்றத் தேர்தலில், காங்கிரஸ் எந்த அரசியல் கட்சியுடனும் கூட்டணி அமைக்காது. கூட்டணி என்பது இதயத்தால் அமைக்கப்படுவது. யாராவது எங்களது கட்சியில் இணைய விரும்பினால் அவர்களை வரவேற்போம்" என தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து உத்தரப்பிரதேச சட்டமன்றத் தேர்தலை பிரியங்கா காந்தியின் தலைமையில் எதிர்கொள்வோம் என தெரிவித்துள்ள சல்மான் குர்ஷித், "நாங்கள் வெற்றிபெறுவதை உறுதிசெய்ய பிரியங்கா காந்தி கடுமையாக உழைத்துவருகிறார். காங்கிரஸின் முதல்வர் வேட்பாளராக அவர் அறிவிக்கப்படலாம்" எனவும் கூறியுள்ளார்.
மேலும், உத்தரப்பிரதேச தேர்தலுக்கான காங்கிரஸின் தேர்தல் அறிக்கை குறித்து பேசியுள்ள சல்மான் குர்ஷித், "நாங்கள் சாதாரண மக்களுடன் தொடர்புகொண்டுவருகிறோம். தேர்தல் அறிக்கையில் சாமானிய மக்களின் குரல் இருக்கும். விவசாயிகள் மற்றும் பெண்கள் பாதுகாப்புக்கு முக்கிய கவனம் அளிக்கப்படும். நாடு பலவீனமான சுகாதார அமைப்பைக் கொண்டிருக்கிறது. கரோனா தொற்று பரவலின்போது இந்த உண்மை வெளிப்பட்டுவிட்டது. எனவே சுகாதாரத்துறைக்கும் கவனம் அளிக்கப்படும். கல்வித்துறையையும் வலுப்படுத்த வேண்டும்" என கூறியுள்ளார்.