Skip to main content

உள்துறை அமைச்சக ஊழியர்களுக்கு எதிரான ஊழல் புகார்கள்; வெளியான அறிக்கை

Published on 21/08/2023 | Edited on 21/08/2023


 

Report published Corruption complaints against civil servants in the Interior

உள்துறை அமைச்சக அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கு எதிராக கடந்த ஆண்டு அதிக ஊழல் புகார்கள் பதிவானதாக மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம் தெரிவித்துள்ளது.

 

மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம் வருடாந்திர அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அவ்வாணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கடந்த ஆண்டு, மத்திய அரசின் அனைத்துத் துறைகள், அமைப்புகள் ஆகியவற்றைச் சேர்ந்த அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கு எதிராக 1,15,203 புகார்கள் பெறப்பட்டுள்ளன. அதில் 85,437 புகார்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. இன்னும் 29,766 புகார்கள் நிலுவையில் உள்ளன. அதிலும், 22,000க்கும் மேற்பட்ட புகார்கள்  3 மாதங்களுக்கும் மேலாக நிலுவையில் உள்ளன. 

 

மத்திய அமைச்சகங்களில் அதிகபட்சமாக உள்துறை அமைச்சக அதிகாரிகள், ஊழியர்களுக்கு எதிராக 46,643 புகார்கள் முடித்து வைக்கப்பட்டுள்ளன. ரயில்வே துறையில் உள்ள ஊழியர்களுக்கு எதிராக 10,580 புகார்கள் வந்துள்ளன. வங்கித் துறையில் உள்ள ஊழியர்களுக்கு எதிராக 8,129 புகார்கள் பெறப்பட்டுள்ளன. 

 

டெல்லி அரசு ஊழியர்களுக்கு எதிராக 7,370 ஊழல் புகார்கள் வந்துள்ளன. இதில் 6,804 புகார்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்புற விவகாரங்கள் துறையில் 4,710 புகார்களும், நிலக்கரி அமைச்சகத்தில் 4,304 புகார்களும், பெட்ரோலிய அமைச்சகத்தில் 2,617 புகார்களும், மத்திய நேரடி வரிகள் வாரிய அதிகாரிகளுக்கு எதிராக 2,150 புகார்களும் பெறப்பட்டுள்ளன.

 

ராணுவ அமைச்சக ஊழியர்களுக்கு எதிராக 1,619 ஊழல் புகார்களும், தொலைத்தொடர்புத் துறை ஊழியர்கள் மீது 1,308 ஊழல் புகார்களும், நிதி அமைச்சக ஊழியர்களுக்கு எதிராக 1,202 புகார்களும் பெறப்பட்டுள்ளன. காப்பீட்டு நிறுவன ஊழியர்களுக்கு எதிராக 987 ஊழல் புகார்களும், பணியாளர் நலத்துறை அமைச்சக ஊழியர்கள் மீது 970 புகார்களும் பெறப்பட்டுள்ளன” என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்