Skip to main content

“அம்பேத்கர் இஸ்லாம் மதத்திற்கு மாறியிருந்தால்...” - சர்ச்சையைக் கிளப்பிய காங்கிரஸ் தலைவர்!

Published on 12/11/2024 | Edited on 12/11/2024
Congress leader Controversy says about Babasaheb Ambedkar

மகாராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்ட் ஆகிய மாநிலத்தில் நடைபெறும் சட்டமன்றத் தேர்தலோடு, கர்நாடகாவில் காலியானதாக அறிவிக்கப்பட்ட சென்னபட்டணா, சிக்காவி, சண்டூர் ஆகிய  3 தொகுதிகளில் நாளை (13-11-24) இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில், பாபாசாகேப் அம்பேத்கர் இஸ்லாம் மாற தயாராக இருந்தார் என காங்கிரஸ் தலைவர் பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

சிக்காவி சட்டமன்றத் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் யாசிர் அகமது கானை ஆதரித்து ஷிகாவ்ன் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏவும், காங்கிரஸ் தலைவருமான சயீத் ஆசிம்பீர் காத்ரி இன்று பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது சயீத் ஆசிம்பீர் காத்ரி பேசுகையில், “பாபாசாகேப் அம்பேத்கர், அந்த நாட்களில் இஸ்லாத்தை ஏற்றுக்கொள்வதற்கும் சேருவதற்கும் தயாராக இருந்தார் ஆனால் அவர் இறுதியில் ஒரு பௌத்த மதத்தை தழுவினார். ஒருவேளை அம்பேத்கர் இஸ்லாம் மதத்திற்கு மாறியிருந்தால், மாநில உள்துறை அமைச்சர் ஜி பரமேஸ்வரா உள்பட பல பட்டியலின சமூகத்தினர், இஸ்லாம் மதத்தை தழுவியிருப்பார்கள்.

பாபாசாகேப் அம்பேத்கர் இஸ்லாத்தில் இணைந்திருந்தால், ராமப்பா திம்மாபூர் ‘ரஹீமாக’ இருந்திருப்பார். பரமேஸ்வரா ‘பீர் சாஹேப்பாக’ இருந்திருப்பார், ஹனுமந்த கவுடா  ‘ஹாசனாக’ இருந்திருப்பார், மஞ்சுநாத் திம்மாபூர் ‘மெகபூப்’ ஆக இருந்திருப்பார்” என்று பேசினார்.  இவரது கருத்துக்கு பா.ஜ.கவினர் உள்பட அனைவரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். காங்கிரஸ் தலைவரின் இந்த பேச்சு தற்போது சர்ச்சையானதை அடுத்து, சயீத் ஆசிம்பீர் காத்ரி தான் கூறிய கருத்துக்கு மன்னிப்பு கேட்டார். 

இது குறித்து அவர் கூறியதாவது, “அம்பேத்கர் பற்றிய எனது கருத்துக்கு வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன். யாருடைய உணர்வுகளையும் துன்புறுத்த வேண்டும் என்ற எண்ணம் முற்றிலும் இல்லை. நான் உண்மையாக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்” என்று தெரிவித்தார். 

சார்ந்த செய்திகள்