Skip to main content

என்ன பேசினார் ஆ.ராசா? பா.ஜ.க., காங்கிரஸ் கொந்தளிக்க காரணம் என்ன?

Published on 06/03/2024 | Edited on 06/03/2024
Congress condemns A. Rasa speech on jai shri Ram
ஆ. ராசா

திமுகவின் துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ஆ. ராசா, சமீபத்தில் திமுக சார்பில் நடத்தப்பட்ட பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் “இந்தியா ஒரு நாடல்ல; ஒரே நாடென்றால் ஒரே மொழி, ஒரே பண்பாடு, ஒரே கலாச்சாரம் இருக்க வேண்டும். அதனால் இந்தியா ஒரு துணைக்கண்டம். இங்கு தமிழ் ஒரு தேசம், ஒரு நாடு; மலையாளம் ஒரு மொழி, ஒரு தேசம், ஒரு நாடு; ஒரியா ஒரு மொழி, ஒரு தேசம், ஒரு நாடு; இப்படி பல மொழி பல தேசங்கள் இருக்கின்றன. இத்தனை தேசிய இனங்களையும் ஒன்று சேர்த்தால்தான் இந்தியா. 

தேர்தலுக்குப் பிறகு திமுக இருக்காது என்று பிரதமர் கூறுகிறார். தேர்தலுக்குப் பிறகு திமுக இருக்காது என்றால் இந்தியாவே இருக்காது. பா.ஜ.க மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அரசியல் சட்டம் இருக்காது. அரசியல் சட்டம் இல்லையென்றால், இந்தியா இருக்காது. இந்தியா இல்லையென்றால் தமிழ்நாடு தனியாகப் போய்விடும். 

நீங்கள் சொல்லுகின்ற ஜெய் ஸ்ரீராமையும், ‘பாரத் மாதா கி ஜே’யையும் நாங்கள் ஒரு போதும் ஏற்றுக்கொள்ள மாட்டோம்”என கடுமையாக சாடியிருந்தார். இது சர்ச்சையாக மாறிய நிலையில் பாஜக கண்டனம் தெரிவித்துள்ளது. 

இது குறித்து பா.ஜ.க மூத்த தலைவர் ரவிசங்கர் பிரசாத் கூறுகையில், “இந்தியாவின் அடையாளத்தை இழிவுபடுத்துவதும், இந்தியர்களின் நம்பிக்கை மற்றும் இந்து கடவுள்களை அவமதிப்பதும் இந்தியா கூட்டணியின் அரசியல் செயல்திட்டமாக மாறி வருகிறது. ஆ. ராசாவின் இத்தகைய கருத்துகளுடன் உடன்படுகிறார்களா? என்பதை காங்கிரஸும், இந்தியா கூட்டணியில் உள்ள பிற கட்சிகளும் சொல்ல வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார். 

Congress condemns A. Rasa speech on jai shri Ram
அமித் மாள்வியா

பாஜக தொழில்நுட்பபிரிவு தலைவர் அமித் மாள்வியா, “திமுகவின் நிலைப்பாட்டில் இருந்து வெறுப்புப் பேச்சுகள் தொடர்ந்து வருகின்றன. சனாதன தர்மத்தை ஒழிப்போம் என உதயநிதி ஸ்டாலின் அழைப்பு விடுத்தார். தற்போது இந்தியாவின் ஒருமைப்பாட்டிற்கு எதிராக ஆ.ராசா அழைப்பு விடுக்கிறார். கடவுள் ராமைரை கேலி செய்கிறார். மணிப்பூர் மக்களை இழிவுபடுத்தும் வகையில் கருத்துகளை கூறுகிறார். இந்தியா ஒரு தேசம் என்ற கருத்தை கேள்விக்குள்ளாக்குகிறார். காங்கிரஸ் கட்சியும் இந்தியா கூட்டணியில் உள்ள மற்ற கட்சிகளும் அமைதியாக இருக்கின்றன. பிரதமர் வேட்பாளராக அவர்கள் முன்மொழிந்த ராகுல் காந்தியும் மௌனமாக இருக்கிறார்” என்று தனது சமூக வலைத்தள பக்கத்தில் ஆ.ராசாவின் காணொளியை பதிவிட்டு அதற்கு ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார். 

இந்த நிலையில் ஆ.ராசாவின் கருத்தில் நான் 100 சதவீதம் உடன்படவில்லை என்று காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் சுப்ரியா ஷ்ரினே தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் பேசும் போது, “ஆ.ராசா கருத்துகளுடன் நான் 100 சதவீதம் உடன்படவில்லை. இந்த இடத்தில் நான் அவரின் பேச்சை கண்டிக்கிறேன். ராமர் அனைவருக்கும் சொந்தமானவர் மற்றும் அனைத்தையும் உள்ளடக்கியவர் என்று நான் நம்புகிறேன். 

Congress condemns A. Rasa speech on jai shri Ram
சுப்ரியா ஷ்ரினே

இமாம்-இ-ஹிந்த் என்று அழைக்கப்பட்ட ராமர் சமூகங்கள், மதங்கள் மற்றும் சாதிகளுக்கு அப்பாற்பட்டவர் என்று நான் நம்புகிறேன்.  ராமர் என்பது வாழ்க்கையின் இலட்சியம், ராமர் என்பது கண்ணியம், ராமர் என்பது நெறிமுறை, ராமர் என்பது அன்பு. அவரது பேச்சை நான் முற்றிலும் கண்டிக்கிறேன். அவருடைய (ராஜாவின்) கூற்றாக இருக்கலாம், நான் அதை ஆதரிக்கவில்லை, நான் அதைக் கண்டிக்கிறேன், மக்கள் பேசும்போது நிதானத்தைக் கடைபிடிக்க வேண்டும் என்று நினைக்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு அமைச்சர் உதயநிதி சனாதன தர்மம் குறித்து பேசிய போது இந்தியா கூட்டணியில் சர்ச்சை எழுந்த நிலையில், ஆ.ராசாவின் பேச்சு மீண்டும் சலசலப்பை உருவாக்கியுள்ளது.

சார்ந்த செய்திகள்