ஆங்கிலேயர் ஆட்சியில் அடிமைப்பட்டு கிடந்த இந்தியாவுக்கு சுதந்திரம் வாங்கிக் கொடுத்த மகத்தான தியாகங்கள் புரிந்ததில் முன் வரிசையில் இருப்பது காங்கிரஸ் பேரியக்கம் தான். மகாத்மா காந்தி மறைந்த பிரதமர் ஜவகர்லால் நேரு என தலைவர்களால் இந்த இயக்கம் வழி நடத்தப்பட்டது.
இப்போதும் நேரு குடும்பமே காங்கிரஸ் கட்சியின் தலைமைப் பொறுப்பில் இருந்து செயல்பட்டு வருகிறது. அரசியல் நிலைப்பாடுகளில் அவ்வப்போது ஏற்படும் சறுக்கலும் அதனால் ஏற்படும் தோல்விகளையும் காங்கிரஸ் பேரியக்கம் சந்தித்து வந்தாலும் இந்திய நாட்டின் மதசார்பின்மைக்கு ஆணிவேராக திகழ்ந்து வருகிறது.
மத்தியில் பாஜக தொடர்ந்து இரண்டாவது முறையும் ஆட்சியில் உள்ளது. இந்திய நாட்டின் அச்சாணியாக இருப்பது மத சார்பின்மை கொள்கைதான். இந்த அச்சாணியை பாஜக அரசு நிர்வாகம் உடைத்து வரும் இந்த காலகட்டத்தில் மதசார்பற்ற சக்திகளை ஒரணியில் திரட்டி நாட்டில் சமூக ஒற்றுமை, அமைதியை ஏற்படுத்தும் கடமை காங்கிரஸ் பேரியக்கத்தின் முன்னால் உள்ளது.
இந்தியாவில் உள்ள முற்போக்கு சக்திகள், இடதுசாரிகள், ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள மதசார்பற்ற மாநில கட்சிகளை இணைத்து மத்திய பாஜகவுக்கு எதிராக போராட வேண்டிய காலத்தில்தான் தற்போது காங்கிரஸ் உள்ளது.
இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் 134 வது வருட துவக்க நாள் இன்று நாடு முழுக்க காங்கிரஸ் கட்சியினரால் கொண்டாடப்பட்டு வருகிறது. ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு சென்னிமலை பெருந்துறை என பல பகுதிகளிலும் காங்கிரசார் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினார்கள். சென்னிமலையில் மாவட்ட தலைவர் மக்கள் ஜி.ராஜன் தலைமையில் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கியதோடு "இந்திய தேசத்தை காப்போம்... இந்திய அரசியலமைப்பை காப்போம்" என கோஷமிட்டனர்.