Skip to main content

சரத் பவார் கட்சிக்கு அதிர்ச்சியளித்த மம்தா... கூட்டணிக்கு காங். வந்தால் பிரச்சனையில்லை எனவும் அறிவிப்பு!

Published on 14/12/2021 | Edited on 14/12/2021

 

MAMATA

 

மேற்கு வங்கத்தில் ஆட்சியைத் தக்கவைத்துக்கொண்டுள்ள திரிணாமூல் காங்கிரஸ், தனது கிளைகளைப் பல்வேறு மாநிலங்களில் பலமாக நிறுவ முயற்சி மேற்கொண்டுவருகிறது. அந்த வகையில், அடுத்த ஆண்டு தேர்தலை சந்திக்கவுள்ள கோவா மாநிலத்தையும் திரிணாமூல் குறிவைத்துவருகிறது.

 

அதனையொட்டி திரிணாமூல் காங்கிரஸ், மகாராஷ்டிரவாதி கோமந்தக் என்ற சிறிய, ஆனால் கோவா அரசியலில் முக்கிய பங்காற்றிவரும் கட்சியுடனும் கூட்டணி அமைத்தது. இந்தநிலையில், கோவா சட்டமன்றத்தில் இருந்த ஒரே ஒரு தேசியவாத காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ நேற்று (13.12.2021) திரிணாமூல் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். இதன்மூலம் திரிணாமூல் காங்கிரசுக்கு கோவாவில் ஒரு எம்.எல்.ஏ. கிடைத்துள்ளார்.

 

அண்மைக்காலமாக தேசியவாத காங்கிரஸ் கட்சியோடு திரிணாமூல் காங்கிரஸ் நெருக்கம் காட்டிவந்த நிலையில், இந்த விவகாரம் அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கிடையே, தேசியவாத காங்கிரஸ் எம்.எல்.ஏ தங்கள் கட்சியில் இணைந்த கூட்டத்தில் பேசிய மம்தா பானர்ஜி, காங்கிரஸ் கட்சி, திரிணாமூல் காங்கிரஸ் கூட்டணியில் சேர்ந்துகொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.

 

இது தொடர்பாக மம்தா கூறியுள்ளதாவது, மேற்கு வங்கத்தில் ஒரு சாலையில் தண்ணீர் தேங்கினாலும், பாஜக மத்திய புலனாய்வு அமைப்புகளை அனுப்புகிறது. ஆனால் கோவாவில் உள்ள தலைவர்கள் ஊழல் பிரச்சினைகளை எழுப்பும்போது, எந்த அமைப்பையும் கண்ணில் கண்டுவிட முடியாது. அவர்கள் (மத்திய புலனாய்வு அமைப்பினர்) ஏன் வரப்போகிறார்கள்? அவர்கள் அனைவரும் பாஜகவினர். காங்கிரஸ் அவர்களுடன் சிறப்பான உறவை பகிர்ந்துகொள்கிறது.

 

காங்கிரசுக்கு எதிராகப் பேச விரும்பவில்லை. பாஜகவைத் தோற்கடிக்க வேண்டும் என்று காங்கிரஸ் நினைத்தால் எங்களுக்கு ஆட்சேபனை இல்லை. கோவாவில் மகாராஷ்டிரவாதி கோமந்தக் கட்சியுடன் கூட்டணி அமைத்துள்ளோம். இன்று தேசியவாத காங்கிரஸ் கட்சி மற்றும் நான்கு ஐந்து கட்சிகளை ஒன்று சேர்த்துள்ளோம். கூட்டணி உருவாகியுள்ளது. இதுதான் பாஜகவுக்கு மாற்று. நீங்கள் எங்களுடன் சேர விரும்பினால் சேர்ந்துகொள்ளுங்கள். அதனால் எந்தப் பிரச்சினையும் இல்லை. நீங்கள் பாஜகவை எதிர்த்து போராடாததால், வேறு யாரும் செய்ய மாட்டார்கள் என்று அர்த்தமல்ல.”

இவ்வாறு மம்தா கூறியுள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்