4 ஆண்டுகால பாஜக ஆட்சியில் மோடி தேர்தலில் வாக்குறுதியாக சொன்னதும், அவர் செய்ததும் என அனைத்தையும் ஆவேசமாக கேள்வி எழுப்பிய ராகுல், பிரதமரின் பார்வையில் ஒருவித பதட்டம் தெரிகிறது, அவர் உண்மையாக இல்லை என்பது இதில் இருந்தே புரிகிறது என மக்களவையில் ஆக்ரோஷமாக தெரிவித்தார்.
மத்தியில் ஆளும் பாஜக அரசுக்கு எதிராக தெலுங்கு தேசம் கட்சி கொண்டு வந்துள்ள நம்பிக்கையில்லா தீர்மானம் மீது இன்று மாலை 6 மணிக்கு வாக்கெடுப்பு நடைபெறுகிறது. முன்னதாக மக்களவையில் விவாதம் நடைபெற்றது. நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதத்தில் ராகுல் காந்தி கலந்து கொண்டு பேசினார்.
அப்போது, தேர்தலில் போது நான் பிரதமரில்லை, பிரதம சேவகன் என்றார் மோடி. பண மதிப்பு நீக்க நடவடிக்கையினால் மக்கள் பெரும் நெருக்கடியை எதிர்கொண்டனர். தேர்தலின்போது கொடுத்த வாக்குறுதிகள் என்ன ஆனது?. பெண்களின் பாதுகாப்பு, வேலைவாய்ப்பு, பெட்ரோல், டீசல் விலை, சிறுபான்மையினர், தலித்துகள் மீதான தாக்குதல் உள்ளிட்ட பல்வேறு கேள்விகளை எழுப்பினார்.
பிரதமரின் பார்வையில் ஒருவித பதட்டம் தெரிகிறது, என்னால் அதை பார்க்கவும் முடிகிறது, உணரவும் முடிகிறது. என் கண்ணைப் பார்த்து பிரதமர் பேச வேண்டும். அவர் அதைத் தவிர்க்கிறார். அவர் உண்மையாக இல்லை என்பது இதில் இருந்தே புரிகிறது என்றார்.