பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் பயணமாக ரஷ்யாவின் 'விளாடிவோஸ்டக்' நகரைச் சென்றடைந்தார். ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின்- பிரதமர் மோடி இடையே இன்று நடைபெறும் பேச்சுவார்த்தையில் பல முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின்றன.
இந்தியா- ரஷ்யா வருடாந்திர உச்சி மாநாடு ரஷ்யாவின் 'விளாடிவோஸ்டக்' நகரில் இன்று நடைபெறுகிறது. இதில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி நேற்று இரவு ரஷ்யா புறப்பட்டு சென்றார். ரஷ்யா நாட்டின் 'விளாடிவோஸ்டக்' விமான நிலையத்தில் சென்ற, அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. ரஷியா சார்பில் அளிக்கப்பட்ட முப்படை வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை பிரதமர் மோடி ஏற்றுக்கொண்டார். மேலும் ரஷிய வாழ் இந்தியர்களும் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பை அளித்தனர்.
பிரதமர் மோடி- அதிபர் புதின் இன்று சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துகின்றனர். அப்போது இரு நாடுகள் இடையேயான உறவு குறித்தும், சர்வதேசப் பிரச்சனைகள் குறித்தும் பேசுகின்றனர். காஷ்மீர் சிறப்பு சட்டப்பிரிவு ரத்து செய்யப்பட்ட விவகாரத்தில் இந்தியாவின் நிலைப்பாட்டுக்கு ரஷ்யா ஏற்கனவே ஆதரவு தெரிவித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் பாதுகாப்பு, வர்த்தகம், அணுசக்தி துறை குறித்தும் இரு தலைவர்களும் ஆலோசனை செய்கின்றனர்.
இந்தியாவில் மேலும் சில அணுமின் நிலையங்களை அமைப்பதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பிரதமர் நரேந்திர மோடியுடன், இந்திய தொழிலதிபர்கள் குழு ஒன்று ரஷியா சென்றுள்ளதாகவும், ரஷியா- இந்தியா இடையே வர்த்தக ஒப்பந்தகள் கையெழுத்தாக வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதனை தொடர்ந்து நாளை நடைபெறும் கிழக்கத்திய பொருளாதார மண்டல மாநாட்டில் பிரதமர் மோடி சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறார். அப்போது இந்திய தொழிலதிபர்கள் மற்றும் வர்த்தக பிரதிநிதிகளையும் சந்தித்து பேசுகிறார். பின்னர் அங்கு நடைபெறும் ஜூடோ சாம்பியன்ஷிப் போட்டியை அதிபர் புதினும், பிரதமர் மோடியும் பார்வையிடுகின்றனர்.