கர்நாடகாவில் வரும் 12ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறுவதையொட்டி பிரசாரம் சூடுபிடித்துள்ளது. இருபெரும் கட்சிகளான காங்கிரசும், பி.ஜே.பியும் சூறாவளி பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருவதால் இவர்களுக்கிடையே கடும் போட்டி நிலவி வருகிறது.
இதைத்தொடர்ந்து பல்வேறு தரப்பில் கருத்து கணிப்புகளும் வெளிவந்த வண்ணம் உள்ளன. ஏற்கனவே கடந்த மாதம் எடுக்கப்பட்ட கருத்து கணிப்புகளில் இரு கட்சிகளும் சம அளவில் வெற்றி பெற்று தொங்கு சட்டசபை அமைய வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியான நிலையில் தற்போது ‘சி போர்’ என்ற அமைப்பு கர்நாடகா தேர்தல் தொடர்பாக புதிய கருத்து கணிப்பை வெளியிட்டுள்ளது.
அதன்படி காங்கிரஸ் கட்சிக்கு மொத்தம் உள்ள 224 தொகுதிகளில் 118 முதல் 128 தொகுதிகள் வரை வெற்றி பெற வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டுள்ளது. கர்நாடகாவில் தனித்து ஆட்சி அமைக்க 113 தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்க வேண்டும். எனவே புதிய கருத்து கணிப்புபடி காங்கிரஸ் கட்சி தனித்து ஆட்சி அமைக்கும் வகையில் வெற்றி பெறும் என்று கூறப்பட்டுள்ளது.
மேலும் பா.ஜனதா கட்சிக்கு 63 முதல் 73 இடங்களில் வெற்றி கிடைக்கும் என்றும், தேவேகவுடா தலைமையிலான மத சார்ப்பற்ற ஜனதா தளம் கட்சிக்கு 29 முதல் 36 இடங்களில் வெற்றி கிடைக்க வாய்ப்பு இருப்பதாகவும் அந்த கருத்து கணிப்பில் கூறப்பட்டுள்ளது. மேலும் கர்நாடகாவில் மோடி அலை இல்லை என்றும் கருத்து கணிப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.