டெல்லியில் மருத்துவ மாணவி நிர்பயா பாலியல் வன்கொடுமையால் உயிரிழந்த வழக்கில் குற்றவாளிகள் 4 பேருக்கும் இம்மாதம் 22ம் தேதி அன்று தூக்கு தண்டனை நிறைவேற்றுவதற்கான ஏற்பாடுகளை திஹார் சிறை நிர்வாகம் செய்து வந்தது. இதில் முகேஷ் சிங் என்ற குற்றவாளி சார்பில், தூக்கு தண்டனையில் இருந்து தன்னை விடுவிக்கக்கோரி குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு கருணை மனு அனுப்பப்பட்டது. ஆனால் குடியரசுத்தலைவர் இந்த கருணை மனுவை நிராகரித்தார்.
கருணை மனு நிராகரிக்கப்பட்டதை அடுத்து, 14 நாட்களுக்கு பின்னர்தான் தண்டனையை நிறைவேற்ற வேண்டும் என்ற விதி இருப்பதால், பிப்ரவரி 1ம் தேதி காலை 6 மணிக்கு 4 பேரையும் தூக்கிலிட வேண்டும் திஹார் சிறை நிர்வாகத்திற்கு டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த சூழலில் மற்றொரு குற்றவாளியான வினய் சர்மா தரப்பில் பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்றத்தில் ஆஜரான வழக்கறிஞர் ஏ.பி. சிங், திகார் சிறை அதிகாரிகள் குறிப்பிட்ட சில ஆவணங்களை தங்களிடம் ஒப்படைக்க காலதாமதம் செய்து வருகின்றனர் என கூறியுள்ளார்.
மேலும், "வினய் சர்மாவுக்கு மெல்ல கொல்லும் விஷம் கொடுக்கப்பட்டு உள்ளது. அவர் சிறை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, பின்னர் தீன்தயாள் உபாத்யாய் மருத்துவமனையிலும், லோக் நாயக் ஜெய் பிரகாஷ் நாராயண் மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டிருந்துள்ளார். அதுமட்டுமல்லாமல் அவரது கையில் முறிவு ஏற்பட்டு உள்ளது. இவற்றிற்கு சிகிச்சையளித்து தொடர்பான ஆவணங்கள் எங்களுக்கு வழங்கப்படவில்லை" என கூறினார். மேலும், வினய் சர்மா சாப்பிடுவதையே நிறுத்தி விட்டார். அவரின் கருணை மனுவை பரிசீலனை செய்யும்பொழுது ஜனாதிபதி, இந்த அனைத்து விஷயங்களையும் கவனத்தில் கொள்ள வேண்டும் என கூறினார். எனினும், இந்த மனுவை நீதிபதி தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.