பீகார் மாநிலத்தில் பாஜகவுடன் ஐக்கிய ஜனதா தளம் கட்சி கூட்டணி அமைத்து நிதிஷ் குமார் தலைமையில் ஆட்சி அமைந்தது. ஆனால் அதன்பிறகு ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பாஜகவுடன் கூட்டணியை முறித்த நிதிஷ்குமார், ஐக்கிய ஜனதா தளம், ராஷ்ட்ரீய ஜனதா தளம், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் உள்ளடக்கிய மகா கூட்டணியை அமைத்து மீண்டும் நிதிஷ்குமார் முதல்வராகப் பதவி வகித்து வந்தார். துணை முதல்வராக தேஜஸ்வி யாதவ் பதவி வகித்து வந்தார். இந்த நிலையில்தான் ஆளும் கட்சி கூட்டணிக்குள் ஏற்பட்ட சில முரண்பாடுகளால் நிதிஷ்குமார் மகா கூட்டணியிலிருந்து விலகியதுடன் தனது பதவியையும் ராஜினாமா செய்தார். அதனைத் தொடர்ந்து அன்றைய தினமே (28.01.2024) பாஜகவுடன் கூட்டணி அமைத்து முதல்வராகவும் பதவியேற்றுக் கொண்டார்.
இந்நிலையில் நிதிஷ்குமார் அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு பீகார் சட்டப்பேரவையில் இன்று (12.02.2024) நடைபெற உள்ளது. 243 எம்.எல்.ஏ.க்களை கொண்ட சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க 122 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு தேவை. அதே சமயம் பா.ஜ.க. 78, ஐக்கிய ஜனதா தளம் 45, இந்துஸ்தான் அவாமி மோர்ச்சா 4, ஒரு சுயேச்சை எம்.எல்.ஏ. என பாஜக கூட்டணி அரசுக்கு 128 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு இருப்பதாக நிதிஷ் குமார் தெரிவித்துள்ளார்.
மேலும் பாட்னாவில் உள்ள ராஷ்ட்ரீய ஜனதா தளம் தலைவர் தேஜஸ்வி யாதவ் வீட்டின் முன்பு நேற்று இரவு போலீசார் குவிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனைக் கண்டித்து அக்கட்சி தொண்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கிடையே ஹைதராபாத்தில் தங்க வைக்கப்பட்ட காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் பாட்னா திரும்பினர். தேஜஸ்வி யாதவ் வீட்டில் ராஷ்ட்ரீய ஜனதா தள எம்.எல்.ஏ.க்கள் தங்க வைக்கப்பட்டுள்ள நிலையில் அவர்கள் அடைத்து வைக்கப்பட்டுள்ளதாக பாஜக குற்றம் சாட்டியுள்ளது. ராஷ்ட்ரீய ஜனதா தளத்தைச் சேர்ந்த எம்.எல்.ஏ. சேட்டன் ஆனந்த் கடத்தி வைக்கப்பட்டுள்ளதாக அவரது சகோதரர் சார்பில் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதற்கு தான் விருப்பப்பட்டே இங்கு தங்கியுள்ளதாக தெரிவித்துள்ளார்.