புதுச்சேரியில் 100% தடுப்பூசி செலுத்த வேண்டும் என அரசும், சுகாதாரத் துறையும் முழு வீச்சில் இயங்கி வருகிறது. சுகாதாரத் துறை மற்றும் மருத்துவ ஊழியர்கள் நகரப்பகுதிகளில் வீதி வீதியாக சென்று தடுப்பூசி செலுத்துவதைப் போன்று கிராமப் பகுதிகளிலும் செவிலியர்கள், மருத்துவப் பணியாளர்களுடன் வீடு வீடாகச் சென்று தடுப்பூசி செலுத்தி வருகின்றனர்.
அதன்படி இன்று காலை கூடப்பாக்கம் ஆரம்ப சுகாதார நிலையத்திலிருந்து கோனேரிகுப்பம் கிராமத்திற்குத் தடுப்பூசி செலுத்த சென்ற செவிலியர்கள் தடுப்பூசி செலுத்தாத ஒருவரை அழைத்தபோது அவர் மரம் வெட்டும் வேலை உள்ளது என்று மரத்தின் மேலே அரிவாளுடன் சென்று அமர்ந்து மரத்தை வெட்டுவது போன்று நடித்துக் கொண்டிருந்தார். அவருக்கு சுகாதார ஊழியர்கள் உடனடியாக தடுப்பூசி செலுத்த வேண்டும் கீழே இறங்கி வாருங்கள் என்று கூறியபோதும், 'மரத்தின் மேலே வந்து தடுப்பூசி போடுங்கள்' என்று கூறிவிட்டு தடுப்பூசிக்கு பயந்து மரத்தின் மேலே மரத்தை வெட்டுவது போல அமர்ந்து போக்கு காட்டிய வீடியோ சமூக வலைதளங்களில் பரவிவருகிறது.
புதுச்சேரியில் ஏற்கனவே ஒரு மூதாட்டி தடுப்பூசி செலுத்துவதற்காக வந்தவர்களை சாமியாடி துரத்திய நிலையில், தற்போது தடுப்பூசிக்கு பயந்து மரத்தின் மேலமர்ந்து மரம் வெட்டுவது போன்று நடித்த கிராமவாசி குறித்தான வீடியோ தற்போது பரவலாக பேசப்பட்டு வருகிறது. இதேபோல் அண்மையில் வயது முதிர்ந்த தம்பதிக்கு தடுப்பூசி போட சென்ற நிலையில், மூதாட்டி ஒருவர் தடுப்பூசி போட கூடாது என்று சாமியாடிய வீடியோ வெளியாகி சமூக வலைத்தளத்தில் கேலிக்குள்ளாகியிருந்தது குறிப்பிடத்தகுந்தது.