Skip to main content

"பாரம்பரியம், கலாச்சாரம் பாதுகாக்கப்பட்டுள்ளது" - அமைச்சர் ரகுபதி

Published on 18/05/2023 | Edited on 18/05/2023

 

our traditional  culture protected law minister raghupathy 

 

மாடுகள் மூலம் நடத்தப்படும் ஜல்லிக்கட்டு, கம்பாலா உள்ளிட்ட விளையாட்டுகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள சட்டத்திற்கு எதிராக விலங்குகள் நல அமைப்புகள் சார்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை நீதிபதி கே.எம்.ஜோசப் தலைமையிலான ஐந்து பேர் கொண்ட அரசியல் அமர்வு தொடர் விசாரணை மேற்கொண்டது.

 

இந்த வழக்கின் விசாரணையின் போது ஜல்லிக்கட்டு போட்டியின் போது காளைகள் துன்புறுத்தப்படுகிறது என்றும், காளைகளை வற்புறுத்தி போட்டிகளில் பங்கேற்க வைக்கின்றனர் என்றும் விலங்குகள் நல அமைப்புகளால் வாதிடப்பட்டது. இதையடுத்து, ஜல்லிக்கட்டு என்பது தமிழர்களின் கலாச்சாரம் சார்ந்த நிகழ்வு. பாரம்பரியம், இறை வழிபாடு அம்சங்களுடன் தொடர்புடையது. இது தொடர்பாக தமிழக அரசு கொண்டு வந்த சட்டத்திற்கு குடியரசு தலைவரும் ஒப்புதல் அளித்ததால் விலங்குகள் நல அமைப்புகளின் மனுக்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று தமிழக அரசு வாதிட்டது.

 

இப்படி அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில் நீதிபதி கே.என்.ஜோசப் தலைமையிலான அமர்வு வழக்கின் தீர்ப்பை இன்று வழங்கியுள்ளது. அதன்படி ஜல்லிக்கட்டு போட்டிற்கு தடை விதிக்க மறுத்துள்ள உச்சநீதிமன்றம் ஜல்லிக்கட்டு தொடர்பாக, ‘தமிழ்நாடு அரசு சமர்ப்பித்த ஆவணங்கள் திருப்தி அளிக்கும் வகையில் உள்ளது. ஜல்லிக்கட்டு தமிழ்நாட்டின் கலாச்சாரத்தோடு ஒருங்கிணைந்த பகுதி என்பதை ஏற்றுக்கொள்கிறோம்’ என்று கூறியுள்ளது.

 

our traditional  culture protected law minister raghupathy 

 

தீர்ப்பு வெளியான நிலையில் தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி உச்சநீதிமன்ற வளாகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்து பேசுகையில், "ஜல்லிக்கட்டானது சட்டத்துக்கு உட்பட்டு நடத்தப்படுகிறது. தமிழக மக்களுக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன். இனி தொடர்ந்து ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும். கிராமப்புற இளைஞர்கள் தங்களது வீரத்தை வெளிப்படுத்தும் வகையில் இந்த போட்டியானது நடத்தப்படுகிறது.

 

இந்த தீர்ப்பின் மூலம் பாரம்பரியம், கலாச்சாரம் பாதுகாக்கப்பட்டுள்ளது. மேலும், முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் வழக்கறிஞர்களுக்கும் நன்றியை தெரிவித்து கொள்கிறேன். ஜல்லிக்கட்டில் காளைகளுக்கு உரிய பாதுகாப்பு அளிக்கப்படுகிறது. மேலும், அனைத்து விதமான நிபந்தனைகளையும் மதித்துத் தான் போட்டி நடத்தப்படுகிறது. உச்சநீதிமன்றம் சிறப்பான தீர்ப்பை வழங்கியுள்ளது. இந்த வழக்கு தொடர்பான அரசியலமைப்பு சட்ட அமர்வில் இருந்த ஐந்து நீதிபதிகளும் ஒரே மாதிரியான தீர்ப்பை வழங்கி உள்ளனர். தமிழக அரசுக்கு கிடைத்த மிகச் சிறந்த ஒரு தீர்ப்பு ஆகும்" எனத் தெரிவித்துள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்