இந்தியா - சீனா இடையே கடந்த வருடம் எல்லைப்பிரச்னை காரணமாக மோதல் வெடித்தது. இதில், 20 இந்திய இராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். சீனா தரப்பில், 45 பேர் வரை பலியானதாகக் கூறப்படுகிறது. இந்தச் சம்பவத்தை தொடர்ந்து எல்லையில் தொடர் பதற்றம் நிலவிவருகிறது. மேலும், இந்தியப் பகுதிக்குள் நுழைந்து, சீனா ஆக்கிரமிப்பில் ஈடுபட்டுள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.
இந்தநிலையில், முன்னாள் இராணுவத் தளபதியும், தற்போதைய மத்திய இணையமைச்சருமான வி.கே. சிங் சமீபத்தில் அளித்த ஒரு பேட்டியில் கூறிய விஷயங்கள், இந்தியாவிற்கு எதிராகத் திரும்பியுள்ளது. அவர் அளித்த பேட்டி ஒன்றில், "எல்லை ஒருபோதும் வரையறுக்கப்படவில்லை. சீனா உண்மையான கட்டுப்பாட்டுக் கோட்டைத் தாண்டி ஊடுருவியிருந்தது என்றால், இந்தியாவும் அவ்வாறே செய்தது. ஆனால் அரசாங்கம் அதை அறிவிக்கவில்லை எனத் தெரிவித்தார். மேலும் அவர், சீனா 10 முறை எல்லையில் ஊடுருவியிருந்தால், நாங்கள் குறைந்தது 50 முறை ஊடுருவியிருப்போம் எனக் கூறினார்.
வி.கே.சிங்கின் இந்தப் பேட்டியை, சீனா தங்களுக்குச் சாதகமாக்கிக்கொள்ள முயன்று வருகிறது. வி.கே.சிங்கின் இந்தக் கருத்து குறித்து சீன வெளியுறவுத்துறை, "இது இந்தியத் தரப்பு தெரியாமல் அளித்த ஒப்புதல் வாக்குமூலம்" எனக் கூறியுள்ளது. மேலும், "நீண்ட காலமாக, சீனாவின் எல்லையை ஆக்கிரமிக்கும் முயற்சியாக, இந்தியத் தரப்பு எல்லைப் பகுதியில் அடிக்கடி அத்துமீறல் நடவடிக்கைகளை மேற்கொண்டதுடன் தொடர்ந்து சச்சரவுகளையும் பிரச்சனைகளையும் உருவாக்கியது. இது சீனா-இந்திய எல்லையில் ஏற்பட்டுள்ள பதற்றங்களுக்கு மூல காரணமாகும்" எனத் தெரிவித்துள்ளது.
இந்தநிலையில், காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி, "வி.கே. சிங்கை உடனடியாகப் பதவி நீக்கம் செய்யவேண்டும்" எனக் கூறியுள்ளார். இதுகுறித்து அவர், "இந்தியாவுக்கு எதிரான சூழலை உருவாக்க பாஜக அமைச்சர் சீனாவிற்கு ஏன் உதவுகிறார்? அவர் பதவிநீக்கம் செய்யப்பட வேண்டும். அவரை பதவி நீக்கம் செய்யவில்லை என்றால், அது ஒவ்வொரு இந்திய வீரரையும் அவமதிப்பதாகும்" எனத் தெரிவித்துள்ளார்.