Skip to main content

வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த முதல்வர் சித்தராமையா!

Published on 08/06/2023 | Edited on 08/06/2023

 

chief minister siddaramaiah put an end to rumours

 

கர்நாடக மாநில சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்தின் போது காங்கிரஸ் கட்சி சார்பில் அனைத்து வீடுகளுக்கும் 200 யூனிட் இலவச மின்சாரம், குடும்பத் தலைவிகளுக்கு ரூ.2,000, வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ள குடும்பத்தில் உள்ள ஒவ்வொரு உறுப்பினருக்கும் 10 கிலோ அரிசி இலவசம், 18 முதல் 25 வயது வரை உள்ள பட்டதாரி இளைஞர்களுக்கு இரண்டு ஆண்டுகளுக்கு மாதந்தோறும் ரூ.3,000 மற்றும் டிப்ளமோ படித்தவர்களுக்கு ரூ.1,500, அரசு பேருந்தில் பெண்களுக்கு இலவசப் பயணம் என்று  அறிவித்திருந்தது.

 

இதையடுத்து நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியைக் கைப்பற்றியது. அதனைத் தொடர்ந்து சித்தராமையா முதல்வராகவும், டி.கே.சிவகுமார் துணை முதல்வராகவும் பதவியேற்றுக் கொண்டனர். முதல்வர் சித்தராமையா தலைமையிலான அரசு பதவியேற்ற உடனே பெண்களுக்கு இலவச பேருந்து பயணம், இளைஞர்களுக்கு உதவித்தொகை உள்ளிட்ட 5 வாக்குறுதிகளை நிறைவேற்றி அமைச்சரவையில் ஒப்புதல் அளிக்கப்பட்டு இருந்தது. இதையடுத்து முதல்வர் சித்தராமையா தலைமையில் சமீபத்தில் நடைபெற்ற கர்நாடக மாநில அமைச்சரவை கூட்டத்தில் காங்கிரஸ் சார்பில் அறிவிக்கப்பட்ட இத்திட்டங்கள் அனைத்தும் நிபந்தனைகள் இன்றி அனைவரையும் சென்றடையும் வகையில் அமல்படுத்த முடிவு செய்யப்பட்டது. இந்நிலையில் கர்நாடகாவில் அமல்படுத்த உள்ள இலவச மின்சார திட்டம் சொந்தமாக வீடு வைத்துள்ளவர்களுக்கு மட்டுமே பொருந்தும். வாடகை வீட்டில் வசிப்பவர்களுக்கு இலவச மின்சாரம் வழங்கும் திட்டம் பொருந்தாது என்று மக்கள் மத்தியில் வதந்தி பரவியது.

 

இதையடுத்து இன்று முதல்வர் சித்தராமையா ட்விட்டரில், "வீடுகளுக்கு 200 யூனிட் இலவச மின்சாரம் வழங்கும் திட்டம் வாடகை வீட்டில் வசிப்பவர்களுக்கும் பொருந்தும். இந்த திட்டத்தை செயல்படுத்த அதிகாரிகளுக்கு உரிய வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளன. வறுமைக்கோட்டுக்கு கீழ் மற்றும் வறுமைக்கோட்டுக்கு மேல் உள்ள ரேஷன் கார்டு வைத்திருக்கும் குடும்பத் தலைவிகள் ரூ.2,000 உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம். ஆனால் வருமான வரி செலுத்துவோர் மற்றும் ஜிஎஸ்டி பதிவு செய்தவர்கள் இந்தத் திட்டத்தின் கீழ் பயன் பெற முடியாது" எனத் தெரிவித்துள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்