நாடு முழுவதும் பள்ளி, கல்லூரி இறுதித் தேர்வுகளை எப்படி நடத்துவது? ஒத்திவைக்கப்பட்ட பிளஸ்- 2 பொதுத்தேர்வை எப்போது நடத்துவது என்பது குறித்து அனைத்து மாநில கல்வித்துறை அமைச்சர்கள் மற்றும் மாநில கல்வித்துறைச் செயலாளர்களுடன் மத்திய அமைச்சர்களின் உயர்மட்டக் குழு ஆலோசனை நடத்தி வருகிறது.
மத்திய அரசு சார்பில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் காணொளி மூலம் நடைபெற்று வரும் ஆலோசனை கூட்டத்தில் மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால், மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் மற்றும் மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, பள்ளிக்கல்வித்துறையின் செயலாளர் தீரஜ்குமார், தமிழக உயர்க்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, உயர்கல்வித்துறைச் செயலாளர் அபூர்வா ஆகியோர் கலந்துக் கொண்டுள்ளனர்.
ஒத்திவைக்கப்பட்ட மாநில கல்வி வாரிய பிளஸ்- 2 பொதுத்தேர்வு, சிபிஎஸ்இ பிளஸ்- 2 பொதுத்தேர்வு நடத்துவது பற்றியும், நீட், ஜெ.இ.இ. போன்ற உயர்கல்வி நுழைவுத்தேர்வுகள் குறித்தும் மாநிலங்களின் கருத்துகளைக் கேட்டறிந்து வருகிறது மத்திய அமைச்சர்களின் உயர்மட்டக் குழு.