புதுச்சேரியிலுள்ள ஜிப்மர் மருத்துவக் கல்லூரியில் புதுச்சேரி மாணவர்களுக்காக 64 இடங்களை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஜிப்மர் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது; புதுச்சேரி ஜிப்மரில் இந்தாண்டு 64 எம்.பி.பி.எஸ்., இடங்கள் புதுச்சேரி மாணவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. ஜிப்மர் மருத்துவக் கல்லுாரியில் எம்.பி.பி.எஸ் சேர்க்கை கலந்தாய்வு இந்திய அரசின் மருத்துவ மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் கீழ் செயல்படும் மருத்துவ கலந்தாய்வு கமிட்டி மூலம் நடத்தப்படுகிறது. இதற்கான விண்ணப்பம் விரைவில் அகில இந்திய அளவில் வரவேற்கப்பட உள்ளது.
புதுச்சேரி ஜிப்மர் மருத்துவக் கல்லுாரியில் 182 இடங்கள், காரைக்கால் கிளையில் 61 இடங்கள் என மொத்தம் 243 எம்.பி.பி.எஸ் இடங்கள் உள்ளன. இதில் 64 இடங்கள் புதுச்சேரி மாணவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி ஜிப்மரில் 134 சீட்டுகள் பொதுவாகவும், 48 சீட்டுகள் புதுச்சேரி மாணவர்களுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது. அதேபோல் காரைக்கால் ஜிப்மரில் 45 சீட்டுகள் பொதுவாகவும், 16 சீட்டுகள் புதுச்சேரி மாணவர்களுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்தாண்டு எம்.பி.பி.எஸ் கவுன்சிலிங்கில் புதுச்சேரி குடியிருப்பு விஷயத்தில் பிரச்சனை எழுந்தால், மாநில சுகாதாரத் துறையின் நோடல் அதிகாரி முடிவெடுக்க அனுப்பப்படும் எனவும் ஜிப்மர் நிர்வாகம் தெளிவுபடுத்தியுள்ளது.