சனாதன ஒழிப்பு மாநாட்டில் சனாதனத்தை நாம் எதிர்ப்பதை விட ஒழிக்க வேண்டும் என அமைச்சர் உதயநிதி பேசியது இந்தியா முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. பாஜக, இந்துத்துவா அமைப்புகள் போன்றவை அமைச்சர் உதயநிதிக்கு எதிராகக் கருத்து தெரிவித்து வருகின்றனர். இருப்பினும் அவரது பேச்சுக்கு ஆதரவான கருத்துகளும் குவிந்து வருகின்றன.
இந்த நிலையில், சனாதனத்திற்கு ஆதரவாக உத்தர பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் ஒரு கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். கடந்த புதன் கிழமை (06-09-23) ஜென்மாஷ்டமி விழா நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. உத்தரபிரதேசத்தில் உள்ள காவல் கோட்டத்தில் ஜென்மாஷ்டமியை முன்னிட்டு கலாச்சார நிகழ்ச்சி ஒன்று நடந்தது. இந்த நிகழ்ச்சியில் உத்தர பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் கலந்து கொண்டு பேசினார்.
அதில் அவர், “சனாதன தர்மத்தை நோக்கி விரல் நீட்டுவது என்பது மனிதகுலத்தை சிக்கலில் தள்ளும் தீய முயற்சிக்கு சமம். சூரியனை பார்த்து துப்புவதை பற்றி ஒரு முட்டாள் மட்டுமே நினைக்க முடியும். எதிர்க்கட்சிகள் செய்த தவறான செயல்களால் அவர்களின் எதிர்கால சந்ததியினர் வெட்கத்துடன் வாழ்வார்கள். சனாதன தர்மத்தை அழிக்க நினைத்தவர்கள் அனைவரும் தாங்களாகவே அழிந்தனர். எதிர்க்கட்சிகள் அற்ப அரசியல் செய்ய முயற்சி செய்து வருகின்றன. இந்தியாவின் முன்னேற்றத்திற்கு இடையூறு ஏற்படுத்த முயன்று வருகிறார்கள். ஆனால், அது வேலை செய்யாது. ஒவ்வொரு காலகட்டத்திலும், உண்மையைப் பொய்யாக்கும் முயற்சிகள் நடந்துள்ளன.
ராவணனின் ஆணவத்தால் அழிக்க முடியாத சனாதனம், கன்சனின் கர்ஜனையால் அழிக்க முடியாத சனாதனம், பாபர் மற்றும் ஒளரங்கசீப்பின் அட்டூழியங்களால் அழிக்க முடியாத சனாதனம், அரசியல் பசியுள்ள இவர்களால் அழித்துவிட முடியுமா?. சனாதன தர்மமே நித்திய உண்மை என்பதை மறந்துவிடக் கூடாது. அதை யாரும் சேதப்படுத்தவும் முடியாது” என்று கூறினார்.