டெல்லியில் உள்ள விஞ்ஞான் பவனில் இன்று (26/02/2021) மாலை 04.30 மணிக்கு இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா மற்றும் தேர்தல் ஆணையர்கள் செய்தியாளர்களைச் சந்தித்தனர்.
அப்போது பேசிய, தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா, "தமிழகத்தில் மொத்தம் 88,936 வாக்குச்சாவடிகள் அமைக்கப்படவுள்ளன. கடந்த தேர்தலுடன் ஒப்பிடும்போது 34.73% கூடுதலாக வாக்குப்பதிவு மையங்கள் அமைக்கப்படவுள்ளன. அனைத்து வாக்குப்பதிவு மையங்களும் தரைத்தளத்தில் இருப்பதை உறுதிப்படுத்த வேண்டும். வாக்காளர்களின் பாதுகாப்பு மிக மிக முக்கியம் எனத் தேர்தல் ஆணையம் கருதுகிறது. 80 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு, தபால் வாக்களிக்கும் முறை அமல்படுத்தப்படுகிறது. 80- வயதுக்கு மேற்பட்டோர் விருப்பப்பட்டால் தபால் வாக்களிக்கலாம்; இல்லையென்றால் வாக்குச்சாவடிக்கு நேரில் சென்றும் வாக்களிக்கலாம். கரோனா அச்சுறுத்தல் கருதி வாக்குப்பதிவு நேரம் ஒரு மணி நேரம் அதிகரிக்கப்படும். வீடு, வீடாகச் சென்று 5 பேர் மட்டுமே தேர்தல் பரப்புரையில் ஈடுபட வேண்டும். வேட்பாளருடன் 4 பேர் மட்டுமே வீடு வீடாகச் சென்று பரப்புரை மேற்கொள்ளலாம். வாக்குப்பதிவு நேரத்தை அதிகரிப்பது பற்றி மாவட்ட தேர்தல் அதிகாரி முடிவெடுத்துக் கொள்ளலாம்.
வேட்பு மனுத் தாக்கலுக்கு இரண்டு பேர் மட்டுமே வர அனுமதி; இரண்டு வாகனங்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும். தேர்தல் பணியாளர்கள் அனைவருக்கும் கரோனா தடுப்பூசிப் போடப்படும். பதற்றமான வாக்குச்சாவடி மையங்களில் கூடுதல் துணை ராணுவப்படையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவர். தமிழகத்தில் தேர்தல் செலவுகள் அதிகமாக இருக்கும் என்பதால் முக்கிய மாநிலமாகப் பார்க்கப்படுகிறது. தேர்தல் தேதி குறித்த ஆலோசனையின் போது பண்டிகை, தேர்வுகளையும் கருத்தில் கொண்டோம். தமிழகத்திற்கான தேர்தல் பார்வையாளர்களாக தர்மேந்திர குமார் மற்றும் அலோக் வர்தன் நியமிக்கப்பட்டுள்ளனர்" என்றார்.