2014-ம் ஆண்டு டிசம்பர் 31-ந் தேதிக்கு முன்பு, பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளிலிருந்து இந்தியாவிற்கு இடம்பெயர்ந்த இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு குடியுரிமை வழங்கும் வகையிலான குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை மக்களவையில் உள்துறை அமைச்சர் அமித்ஷா திங்கள்கிழமை தாக்கல் செய்தார்.
சுமார் 7 மணி நேரம் நடந்த விவாதத்திற்கு பிறகு மக்களவையில் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில் தேசிய குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவை மாநிலங்களவையில் உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று அறிமுகம் செய்தார். அப்போது மாநிலங்களவையில் பேசிய சிதம்பரம், இந்த சட்டதிருத்தத்தை கடுமையாக எதிர்த்தார்.
பின்னர் இதுகுறித்து பேட்டியளித்த அவர், "தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசியலமைப்பிற்கு புறம்பாக ஏதாவது செய்யும்படி கேட்கப்படும் இந்த நாள் ஒரு வருத்தமளிக்கும் நாள். இந்த மசோதா அரசியலமைப்பிற்கு விரோதமானது. 130 கோடி மக்கள் அவர்களுக்கு ஆதரவளிப்பதாக மத்திய அரசு கூறுகிறது, ஆனால் வடகிழக்கு இந்தியா ஏரிந்துகொண்டிருக்கிறது.
இந்த மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டால் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும். நீதிபதிகள் கண்டிப்பாக இதனை ஏற்றுக்கொள்ளமாட்டார்கள் என நான் உறுதியாக நம்புகிறேன்" என தெரிவித்தார். ப.சிதம்பரத்தின் இந்த பேச்சை தொடர்ந்து காங்கிரஸ் சார்பில் இந்த சட்டதிருத்தத்தை எதிர்த்து வழக்கு தொடரப்படலாம் என பேச்சு எழுந்துள்ளது.